அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டி உரையாற்றினார். இந்த விழாவுக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ராமர் படங்களை வைத்து வழிப்பட்டனர்.
இந்நிலையில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் அவர், “ராமர் கோயில், ராமசந்திர மூர்த்திக்கு ஜே என்று சொல்லுங்கள்! ஜெய் ஸ்ரீராம்!” என்று தெரிவித்திருந்தார். இந்தப் பதிவைக் கண்ட ட்விட்டர்வாசி, ‘இறுதியில் நஹத் (குஷ்பு) பக்தாவானார். வாழ்த்துகள் மேடம்’ என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த குஷ்பு, “ நஹத் ஒரு இந்தியர். இந்தியன் என்பதில் பெருமைக்கொள்கிறேன். புரிந்ததா?” என்று பதில் அளித்திருந்தார். பல விஷயங்களில் குஷ்பு தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், நடிகை குஷ்பு பாஜக பக்கம் சாய்வதாக காங்கிரஸ் கட்சியினரே பேசிவருகிறார்கள். இந்நிலையில் ராமர் கோயில் விழாவுக்கு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.