துக்ளக் விழாவில் பேசியது குறித்து ரஜினி அளித்த விளக்கத்துக்கு நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பூ ஆதரவு தெரிவித்துள்ளார்.
துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையானதையடுத்து, அதுதொடர்பாக நடிகர் ரஜினி நேற்று  விளக்கம் அளித்தார். ரஜினியின் விளக்கத்தை ஏற்க மறுத்த பெரியாரிஸ்ட்கள் ரஜினியை விமர்சித்துவருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் விளக்கத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பூ ஆதரவு அளித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சரியோ அல்லது தவறோ, அது அவரின் தனிப்பட்ட பார்வை மற்றும் விருப்பம். ரஜினி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நமக்கு இப்போது தேவை எல்லாம் நேர்மைதான். பயத்தை வைத்து யாரும் ஆதிக்கம் செய்ய முடியாது. உங்கள் மனசு என்ன சொல்கிறதோ, அதைப் பேசுங்கள். எல்லாருக்கும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும்; எல்லாரையும் நீங்கள் மகிழ்விக்க முடியாது.” என்று ரஜினிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். 


இதற்கு ட்விட்டரில் ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் வெளிப்பட்டுவருகிறது. ரஜினியின் அடுத்த படத்தில் குஷ்பு நடித்துவருகிறார். ரஜினியோடு நடிப்பதற்காக இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்று குஷ்புவை பலர் விமர்சித்தனர். அதற்கு பதில் அளித்துள்ள குஷ்பு, “மன்னன், அண்ணாமலை, பாண்டியன், குசேலன் ஆகிய படங்களை எல்லாம் பார்க்கவில்லையா? அதைப் பார்த்துவிட்டு பேசுங்கள். 28 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினியுடன் ஜோடியாக நடித்துவிட்டேன்” என்றும் குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.