மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உண்மை கண்டறியும் குழுவை பாஜக மேலிடம் அமைத்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். 

கொல்கத்தாவில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் பாஜக மேலிடம் உண்மை கண்டறியும் குழுவை அறிவித்துள்ளது. இக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகை குஷ்பு, எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மாணவி கூட்டு பாலியல்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், கடந்த 4-ஆம் தேதி பிறந்தநாள் விழாவுக்கு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பிய மாணவி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த மாணவியை பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார். பிறகுதான் அந்த மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்தனர். 

உண்மை கண்டறியும் குழு

விசாரணையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. மாணவியை பாலியல் கூட்டு வன்கொடுமை செய்ய காரணமாக இருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் மகனை போலீஸார் கைது செய்தனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தால் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உண்மை கண்டறியும் குழுவை பாஜக மேலிடம் அமைத்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். 

குஷ்புக்கு குழுவில் இடம்

அந்தக் குழுவில் தமிழகத்தை சேர்ந்த நடிகை குஷ்பூ, எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். அண்மையில் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் மதம் மாற வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகப் புகார் எழுந்தது. அப்போது விஜயசாந்தி தலைமையில் பாஜக மேலிடம் குழு அமைத்தது. அதுபோல தற்போது கொல்கத்தா சம்பவத்துக்கும் பாஜக மேலிடம் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.