வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் என்னுடைய தகுதியை வளர்த்துக்கொள்வேன் என்று நடிகை கஸ்தூரி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் தீவிரமாக இயங்கிவரும் நடிகைகளில் கஸ்தூரியும் ஒருவர். அரசியல், சினிமா, பொது நிகழ்வுகள் குறித்து வெளிப்படையான, அதிரடியான கருத்துகளைத் தொடர்ச்சியாகத் தெரிவித்துவருபவர். கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். அரசியல் தொடர்பாக அவர் தெரிவிக்கும் கருத்துகள் சில நேரம் சர்ச்சையாகவும் செய்திருக்கின்றன. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கஸ்தூரி கருத்து தெரிவித்திருக்கிறார்.


இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் அரசியலுக்கு வரவேண்டும் என இதுவரை நினைத்ததில்லை. நாடாளுமன்ற தேர்தலில் கூட எனக்கு வாய்ப்பு வந்தது. நான்தான் மறுத்துவிட்டேன்.  நல்லவர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர்; ஆனால், அவர்கள் யாரும் அரசியலில் இல்லை. தகுதி இருக்கிற பலரும் அரசியல் மீது அவநம்பிக்கையில் உள்ளார்கள்.  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்கூட எனக்கு ஏமாற்றம்தான்.  திருடனில் நல்ல திருடனை தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலைதான் இருந்தது.


நல்ல வேட்பாளர்களுக்கோ மக்களிடம்அறிமுகம் இல்லாதவர்களுக்கோ ஓரளவுதான் வாக்குகள் கிடைக்கும். அரசியலுக்கு வருவதற்கு பணம் இருக்க வேண்டும். வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இருக்கக் கூடாது. ஞாபக சக்தி கூடவே கூடாது. அரசியலில் இது நான் அறிந்துகொண்ட பாடம். இதனால்தான் நான் அரசியலுக்கு வரவில்லை.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதற்குள் எனக்கான தகுதியை வளர்த்துக் கொள்வேன். தனிக்கட்சியாகவோ சுயேச்சையாகவோ நிற்க நான் ஒன்றும் அப்பா டக்கர் இல்லை. களப்பணி மேற்கொள்ள ஒரு கட்சி தேவை. தமிழகத்தில் சுயேச்சையை ஊக்கப்படுத்தும் அளவுக்கு மக்கள் தயாராக இல்லை. இவ்வாறு நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.