'கோரிக்கையை ஏற்று, மரம் நடுதலை பாடத்திட்டத்தில் சேர்த்த அமைச்சர் செங்கோட்டையனுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி’ என நகைச்சுவை நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சில ஆண்டுகளாகவே சினிமா ஷூட்டிங் இல்லாத தனது ஓய்வு நேரங்களை சமூக சேவைகள் செய்வதற்காக செலவிட்டு வருகிறார் நடிகர் விவேக். அதிலும் குறிப்பாக மரக்கன்றுகள் நடுவதில் அவர் காட்டும் ஆர்வம் அலாதியானது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளை இப்பணியில் இணைத்துக்கொண்டார். தற்போது மரக்கன்றுகள் நடும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு மதிப்பெண்கள் அளித்திருப்பதை ஒட்டி உற்சாகமடைந்த விவேக் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மரம் நடுதலை பாடத்திட்டத்தில் சேர்க்கலாமே என்று இதற்கு முன்பே கோரிக்கை வைத்திருந்தேன். தற்போது, சிறப்பான வடிவில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கும் தமிழக அரசுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தை கல்வியில் முன்னோடியாக திகழச்செய்யும் நோக்கில், தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப்பள்ளிகளில் இருந்து 50 மாணவ - மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்களை வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்பும் திட்டத்தை கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்கி வைத்தார். இதன்படி, 10 நாள் பயணமாக பின்லாந்து நாட்டிற்கு சென்ற 50 மாணவர்கள் நேற்று முன்தினம் (30ம் தேதி) சென்னை திரும்பினர்.

அவர்களை வரவேற்கும் விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இயற்கை மாற்றத்தைக் கருத்தில்கொண்டு அரசு சார்பில் பல்வேறு இடங்களில் மரம் நடும் விழா நடத்தி வருகிறோம். ஒவ்வொரு மாணவரும் பள்ளிப் பருவத்திலேயே இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு அதைப் பேணிக்காத்து வளர்க்க வேண்டும். 

அதனால், மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும், பாடத்திற்கு இரண்டு மதிப்பெண் வீதம் மொத்தம் 12 மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண், அகமதிப்பீட்டுத் தேர்வுகளில் வழங்கப்படும்” என்று கூறினார். இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையனின் இந்த முயற்சிக்கு நடிகர் விவேக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.