அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் வி.கே.சசிகலாவின்  எடுத்த முதல் அதிரடி  நடவடிக்கை மோசடி வழக்கில் கைதான அதிமுக பிரமுகரை நீக்கியது தான். என்ன காரணத்துக்காக நீக்கப்பட்டார் என்பதன் பரபர பின்னனி என்ன? 

பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தில் வசிப்பவர் எம்ரே (வயது 26). இங்குள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி , மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலை கழகத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

இவர் தனக்கு சொந்தமான  பென்ஸ் காரை விற்க முடிவு செய்தார். ஓஎல்.எக்ஸ் மூலமாக விளம்பரம் செய்தார். 

அதை பார்த்த சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த  நடிகரும்  அதிமுக பிரமுகருமான  பஷீர் (எ) விஜய் கார்த்திக் என்ற  என்பவர், அந்த காரை வாங்கிக்கொள்வதாக கூறி   எம்ரேவை அழைத்துள்ளார். இவர் நடிகரும் , அதிமுக பிரமுகருமான ரித்தீஷின் ஆதரவாளர் ஆவார்.

குறிப்பிட்ட இடத்திற்கு காரை கொண்டு வரச்சொல்லி பார்த்து ரூ.8 லட்சத்துக்கு விலை பேசி ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து விலை பேசி காரை எடுத்து சென்றுள்ளனர்.ஆனால் அதற்கு பின்னர் பணத்தை கொண்டு வந்து தரவில்லை.

இது பற்றி கேட்டபோது எம்ரேவை ஒரு இடத்திற்கு வரச்சொல்லி அவரை தாக்கி அவரிடமிடருந்து பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க டாலர்களை பறித்து சென்றனர். இதுபற்றி எம்ரே வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

ஆனால் கார்த்திக்கின் அரசியல் செல்வாக்கை பார்த்த போலீசார் அவருக்கு எதிராக புகாரை வாங்க மறுத்து விட்டனர்.  இது பற்றி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எதுவும் நடக்காததால் வேறு வழியில்லாமல் துருக்கி தூதரகத்தில் புகார் அளித்தார்.

தூதரகத்திலிருந்து கொடுத்த அழுத்தம் காரணமாக போலீசார் வேறு வழியில்லாமல் விஜய் கார்த்திக்கையும்(44) மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் அவரது நண்பர்களான சவுத்ரி (45), பாபு(30) இரண்டு பேரையும் அள்ளிவந்தனர். அப்போதும் போலீசாருக்கு பல முக்கிய புள்ளிகள் விஜய் கார்த்திக்குக்கு ஆதரவாக நெருக்கடி கொடுத்தனர். 

தூதரக பிரச்சனை , கமிஷனர் தலையீடு என்ற காரணத்தால் லோக்கல் போலீசாரால் ஒன்று சாதகமாக இயங்க முடியவில்லை. வழக்கை போட்டு கார் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். அவர்களை சிறையிலும் அடைத்தனர்.

இவர்கள் அரசியல் ரீதியாக கொடுத்த அழுத்தத்தை காவல்துறை உளவுத்துறை ரிப்போர்ட் போட்டு அனுப்ப ஆரம்பத்திலேயே இது போன்ற ஆட்களை தூக்கினால் தான் கட்சி ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவாக இருக்கும் என்று முடிவெடுத்த சசிகலா உடனடியாக விஜய் கார்த்திக்கை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். 

இந்த விஜய் கார்த்தி தான் ஆனந்தராஜ் வீட்டை முற்றுகையிட போகிறோம் என்று அறிவித்து போராட்டம் நடத்தியவர். விஷால் அலுவலகத்தை தாக்கியதிலும் இவருக்கு தொடர்பு உள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

நடிகர் ரித்தீஷின் தீவிர ஆதர்வாளராக தன்னை காட்டிகொண்டவர்,. இவருக்கு வளசர வாக்கத்தில் அரண்மனை போன்று சொகுசு வீடு உண்டு.இவர் அராத்து என்ற பெயரில் படம் ஒன்றில் நடித்தார். அராத்து என்றால் தறுதலை என்ற ஒரு அர்த்தம் உண்டாம்.