மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வருமாறு நிர்வாகிகள் சுமார் 50 பேரை சென்னை வரவழைத்துவிட்டு நடிகர் விஜய் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவரது வாரிசு என்று கூறிக்கொண்டு அரசியல் களம் புகுந்தார் தீபா. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பதால் அதிமுகவில் கணிசமான தொண்டர்கள் தீபாவை நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்தனர். தினந்தோறும் அவரது வீடு முன்பு ஏராளமானோர் குவிந்தனர். ஆனால் தீபா அவர்களை கண்டுகொள்ளவில்லை. நினைத்த நேரத்திற்கு தூங்கி எழுவது நினைத்த நேரத்திற்கு வீட்டிற்குள் சென்று உறங்குவது என்று இருந்ததால் அவரை அரசியலில் அதிமுக தொண்டர்கள் அனாதை ஆக்கிவிட்டனர்.

தற்போது நடிகர் விஜயின் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது என்கிறார்கள். தமிழகத்தில் நடிகர் ரஜினிக்கு அடுத்த அதிக ரசிகர்கள் மற்றும் ஸ்டார் வேல்யூ கொண்ட நடிகர் என்று விஜயை கூறலாம். தமிழகத்தில் அவருக்கு ரசிகர் மன்றம் இல்லாத கிராமங்களே இல்லை என்றும் சொல்லிவிடலாம். திமுக, அதிமுகவிற்கு இணையாக தனது மக்கள் இயக்கத்தை விஜய் கட்டமைத்துள்ளார். ஆனால் தீபாவை போலவே அவர்களை எப்படி கட்டுப்பாட்டுன் வைத்திருப்பது என்று தெரியாமல் விஜய் திணறுவது போல் தெரிகிறது.

ரசிகர் மன்ற பொறுப்பாளராக புஸ்ஸி ஆனந்த் என்பவர் இருக்கிறார். புதுச்சேரியை சேர்ந்த இவர் வைப்பது தான் விஜய் மக்கள் இயக்கத்தில் சட்டம். விஜயின் தந்தை எஸ்ஏசியை ஓரம் கட்டிவிட்டு விஜயுடன்  நெருக்கமாக இருந்து வருகிறார். இதனால் ஏற்பட்ட எரிச்சலில் தான் எஸ்ஏசி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். ஆனால் இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று விஜய் கூறிவிட்டார். ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் என்கிற வகையில் எஸ்ஏசி அதனை அரசியல் கட்சியமாக மாற்றியதில் விஜயால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள்.

எனவே தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து எஸ்ஏசியுடன் இணைந்து செயல்பட வேண்டாம் என்று நடிகர் விஜயே கூற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தில் சுமார் 200 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். அவர்களில் தினந்தோறும் 50 பேரை அழைத்து எஸ்ஏசி கட்சியுடன் எந்த தொடர்பும் கூடாது என்று விஜய் அறிவுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. நேற்று முதல்கட்டமாக 50 பேரை வரவழைத்து சென்னை பனையூரில் விஜய் அலுவலகத்தில் அமர வைத்தனர்.

காலை 10 மணிக்கு வரவழைக்கப்ப்டட 50 பேரும் மாலை 6 மணி வரை காத்திருந்தனர். ஆனால் கடைசி வரை விஜய் வரவே இல்லை. இதற்கு காரணம் எஸ்ஏசி தரப்பில் இருந்து விஜய்க்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி என்கிறார்கள். இதனால் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை கூட பொருட்படுத்தாமல் அருகே 2 தெரு தள்ளி உள்ள தனது வீட்டிலேயே விஜய் முடங்கியுள்ளார். ரசிகர் மன்ற தலைமைக ழக நிர்வாகிகள் பலமுறை கூறியும் விஜய் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால சுமார் 8 மணி நேரம் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஆலோசனை நடத்த வரவழைத்துவிட்டு அங்கு வராமல் வீட்டிற்குள்ளேயே இருப்பது தீபா ஸ்டைல் அரசியல். அந்த அரசியலில் விஜயும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது ரசிகர்களை சோகம் அடைய வைத்துள்ளது. ஏற்கனவே குடும்ப பிரச்சனையால் விஜய் மக்கள் இயக்கம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இப்படி விஜயும் மக்கள் இயக்க விவகாரத்தில் அலட்சியமாக இருந்தால் அஜித் பாணியில் ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு நடிப்பதில் மட்டும் விஜய் ஆர்வம் காட்டலாம் என்று கூறுகிறார்கள்.