நடிகராக உள்ள சூர்யாவுக்கு மருத்துவர்களின் நீட் தேர்வுபற்றி எப்படி முழுமையாகத் தெரியும்? என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தமிழகம் முழுவதும், பல்வேறு போராட்டங்களும், அரசியல் கட்சிகளின் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக அமைதி வழியில் போராடலாம் என்றும், சட்டம் - ஒழுங்கை மாநில அரசு காக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நீட் தேர்வு என்றால் என்னவென்று தெரியாத 6 ஆம் வகுப்பு மாணவர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்துக்கு தூண்டு விடுகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும். நடிகராக உள்ள சூர்யாவுக்கு மருத்துவர்களின் நீட் தேர்வு பற்றி எப்படி முழுமையாக தெரியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சூர்யா போன்றோர் கோடிக்காக பணியாற்றும்போது, நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றினோம். நீட் தேர்வு கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கு சம வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.