Actor Senthil has filed a petition in the Madurai branch to seek the cancellation of the case against Trichy AIADMK MP Kumar.
திருச்சி அதிமுக எம்.பி குமாரை அவதூறாக பேசியதாக தன்மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் செந்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
திருச்சி தொகுதி, அதிமுக எம்.பி. குமார், தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளார். இவருடைய பாசறை செயலர் மாநிலப் பதவி பறிக்கப்படுவதாக, டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
அன்றே, நடிகர் செந்திலுக்கு அமைப்புச் செயலர் பதவி வழங்கினார். இதையடுத்து கடந்த, 30ம் தேதி, திருச்சி எம்.பி குமார் பற்றி, நடிகர் செந்தில் அவதுாறாக பேசியுள்ளார்.
இதைதொடர்ந்து குமார், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார். அதில், தன்னை செந்தில் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த புகாரின் படி நடிகர் செந்தில் மீது, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் செந்திலுக்கு சம்மன் அனுப்பபட்டது. இந்நிலையில், திருச்சி அதிமுக எம்.பி குமாரை அவதூறாக பேசியதாக தன்மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் செந்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
