மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் அவருடைய சமாதிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தினந்தோறும் மக்கள் கூட்டம் கலைஞர் கருணாநிதியின் சமாதிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். மேலும், கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு பல்வேறு அமைப்பினர் அவர்களது அமைப்பின் சார்பாக தினந்தினம் நினைவேந்தல் நிகழ்ச்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அனைத்து நடிகர்களும் பங்குபெற்றனர். திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நடிகர் ரஜினி அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்தும், செயல் தலைவர் ஸ்டாலினும் அருகருகே அமர்ந்திருந்தனர். நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள், "கருணாநிதி நல்லடக்கம் செய்யும் போது முதல்வர் எடப்பாடி ஏன் மெரினாவிற்கு வரவில்லை?" என்ற கேள்வியை எழுப்பினார். 

நடிகர் ரஜினிகாந்த், கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபொழுதும், இறந்த அன்று கோபாலபுரத்து வீட்டிலும், பிறகு ராஜாஜி ஹால் என அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த அனைத்து இடங்களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.