Actor Rajinikanth pressmeet in chennai

ரஜினி மக்கள் மன்றத்திலும் கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும், எந்த நாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறதோ, அந்த நாடு முன்னேறியுள்ளது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதன் பின்பு, இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளுடன் இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். கிராமங்கள், பேரூராட்சியில் ரஜினி மக்கள் மன்றத்தை பலப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது

இந்த ஆலோசனைக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி விவகாரத்தல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றார். அணைகளின் கட்டுப்பாடு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் இருக்க வேண்டும். காவிரியின் அதிகாரம் கர்நாடகாவிடம் இருப்பது நல்லதல்ல என்றார். கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்றது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்றார். கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு அப்போது அவர் நன்றி தெரிவித்தார்.

ரஜினி மக்கள் மன்றத்துக்கு பெண்கள் மத்தயில் அமோக வரவேற்பு உள்ளதாக கூறினார். பெண்கள் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம் இருக்கும் என்றார். எந்த நாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறதோ, அந்த நாடு முன்னேறியுள்ளது என்றும் கூறினார். ரஜினி மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்.

மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தியாளர் கேள்விக்கு, தடை விதிக்கப்பட்டதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்றார். தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு, இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை... அதற்குள் கூட்டணி பற்றி பேசுவதா? என்றார் ரஜினிகாந்த்.