கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்தவர்கள் மீது நடவடிக்கை  எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து, பாகுபாடு இல்லாத சமய நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கதில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். கந்தசஷ்டிகவசம் குறித்து கருப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோவுக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் வீடியோ வெளியிட்டவர், யூடியூப் சேனல் நிர்வாகிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கருப்பர் கூட்டம் சேனலை தடை செய்யவும் போலீசார் பரிந்துரை செய்தனர். இந்நிலையில் கருப்பர் கூட்டம் விவகாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக, இந்த போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டுமென தனது விருப்பத்தை வெளிப்படுத்தியது. பாஜக மட்டுமல்லாது, தமிழகத்தில் பல்வேறு அரசியல் இயக்கங்களும் முக்கிய பிரபலங்களும் கருப்பர் கூட்டத்திற்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

திமுகவும் தனது பங்குக்கு கருப்பர்  கூட்டத்தினரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்து வந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை கந்தசஷ்டி விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாக கருத்து பதிவிட்டார். அதில், கந்த சஷ்டி கவசத்தை மிகக்கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்க செய்த அந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி செய்தவர்கள் மீது, துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத் துவேஷமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும், ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே கந்தனுக்கு அரோகரா... என பதிவிட்டுள்ளார். ரஜினியின் இந்த கருத்தால் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பதிவை கொண்டாடிவரும் பாஜகவினரும், ரஜினி ரசிகர்களும் கந்தனுக்கு அரோகரா என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். 

இந்நிலையில்  நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி கூறி அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது:- மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு, சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் யாராயினும் அரசியல் செய்யாமல் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு அமைதியை நிலைநாட்டி வருகிறது.அவ்வகையில் கவசமாக இருந்து காக்க என்று கந்தர் அருள்வேண்டி கோடிக்கணக்கான தமிழர்கள் பாடும் பாடலை நிந்தனை செய்தோர் மீதும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயன்றோர் மீதும், மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டு தெரிவித்து, பாகுபாடு இல்லாத சமய நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துள்ள திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.