‘தமிழகத்தின் நலனுக்காக நாங்கள் இணைந்து அரசியல் செய்ய வேண்டியது வந்தால், செய்வோம்’ சமீபத்தில் தேசிய அரசியலையே திரும்பிப் பார்க்கும் வகையில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் சொன்ன டயலாக் இது. நடிகர்களின் அரசியல் இந்த காலத்தில் எடுபடாது! என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்த பெரும் கட்சிகள் இருவருக்கும் இந்த டயலாக்கோ, வயிற்றில் புளியைக் கரைத்தது.  அதனால் ‘அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க கூட மாட்டாங்க. அப்படியே நடிச்சாலும் ஓடாது. ஆக தொழில்லேயே ஒண்ணு சேர முடியாதவங்களா, அரசியல்ல ஒண்ணு சேருவாங்க?’ என்று  அ.தி.மு.க மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கேட்டனர். இதை ரஜினி மற்றும் கமல்ஹாசன் வளர்க்காமல் அப்படியே கடந்து சென்றுவிட்டனர்.

 

அந்த பிரச்னையும் அப்படியே ஓய்ந்ததது. இந்த நேரத்தில்தான் ‘ரஜினியும் கமலும் இணைவது உறுதி’ என்று மீண்டும் ஒரு பரபப்பு கிளம்பியுள்ளது. ஆம் இதை கமல்ஹாசனின் ’மக்கள் நீதி  மய்யம்’ தரப்பும் ஒரு கோணத்தில் ஏற்றுக் கொண்டிருப்பதுதான்! இதில் ஹைலைட்டே. ஆம், கமலும், ரஜினியும் இணைகிறார்கள். ஆனால் அது அரசியலில் அல்ல. மீண்டும் சினிமாவில். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்போது மீண்டும் வரிசையாக சினிமாக்களை தயாரிக்க துவங்கியிருக்கிறது. அந்த வகையில் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்கிறாராம் கமல். இதை இயக்குவது லோகேஷ் கனகராஜ்! என்று தகவல். தன் தயாரிப்பில் நடிக்க சொல்லி ரஜினியிடம் கமல் கேட்டதுமே அவர் ஓ.கே. சொல்லிவிட்டாராம். 

இந்த ப்ராஜெக்ட்டின் மூலம் கிடைக்கும் வருவாயினால் கமலின் கடன் தொல்லைகள் நீங்கும்! என்பதும் ஒரு கணக்கு. 
பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு இதழ் இந்த ஸ்கூப் செய்தியை உடைத்து வெளியிட்டிருப்பதோடு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அபாஸிடமும் இதுபற்றி கேட்டிருக்கிறது. அவரோ “கமல் சாரின் கட்சி அமைப்பு வேறு, ராஜ்கமல் சினிமா நிறுவனம் வேறு. நீங்கள் கேள்விப்பட்டது போல் நானும் எங்கள் தலைவர் தயாரிப்பில் ரஜினி சார் நடிக்கிறார் என கேள்விப்பட்டேன். மேலும் தகவலுக்கு ராஜ்கமல் நிறுவனத்தை அணுகவும்.” என்று ஓப்பனாக சொல்லியிருக்கிறார். 

கமல் கட்சியின் செய்தி தொடர்பாளரே இப்படி சொல்கிறார் என்றால், கமல் தயாரிப்பில் ரஜினி என்பது உறுதியாகிவிட்டது என்றுதானே அர்த்தம். இந்த தகவல்தான் இப்போது தமிழக அரசியல்வாதிகளை அலற வைத்துள்ளது. ’ஏம்பா அவங்க சினிமாவுலதானே சேர்ந்திருக்காங்க. இதுக்கு ஏன் அழுவுறீங்க?’ என்று கேட்டால்....கமல் தயாரிக்கும் படம் தரமாகதான் இருக்கும். அதில் ரஜினி நடித்தால்...மாஸ் அண்டு கிளாஸாக அந்தப் படம் கட்டாயம் வெற்றி பெறும். இந்த வெற்றி தரும் உற்சாகத்தில் இருவரும் அரசியலுக்குள்ளும் கைகோர்ட்து களமிறங்கி, தேர்தலை சந்தித்தால் எங்கள் நிலை என்னவாகும்? என்று புலம்பியிருக்கிறார்கள். சரியான புலம்பல்தான்!


- விஷ்ணுப்ரியா