தமிழகத்தில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக காலடி எடுத்து வைக்கும் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.


பாஜக சார்பில் ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடிகர் ராதாரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். “தமிழகத்தில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக காலடி எடுத்து வைக்கும். இந்தியாவில் இன்னும் 15 ஆண்டுகளுக்கு மோடிதான் பிரதமர். பாஜக  என்ஜின் போன்றது. மீதி கட்சிகள் எல்லாமே ரயில் பெட்டிகள் போன்றது. ரயில் என்ஜின் இல்லாமல் யாரும் பெட்டியில் ஏறி பயணம் செய்ய முடியாது. 
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படவோ பயப்படவோ தேவையில்லை. இந்தச் சட்டம் முதன் முதலில் காங்கிரஸ் கட்சியால்தான் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானதும் அல்ல. நான் இஸ்லாமிய கல்லூரியில் படித்தவன்தான். இந்தச் சட்டம் வங்கதேசத்திலிருந்து ஊடுருவி வந்தவர்களைதான் வெளியேற்றும். எனவே நம் நாட்டில் உள்ளவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. ஆனால், இந்தச் சட்டத்தைப் பற்றி தவறான நோக்கத்திலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் எதிர்க்கட்சிகள் தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது.” என்று நடிகர் ராதாரவி பேசினார்.