தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவர்களாக திகழ்ந்தவர்கள் முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும். தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்க காரணமாயிருந்தவர்கள். ஜாதி, மத மோதல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அதனை இருப்புக் கரம் கொண்டு அடக்கினார்கள்.

ஜாதி மோதல்கள் ஏற்படும் வகையில் யாராவது பேசினால் உடனடியாக அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்களின் நாக்குகளை அடக்கி வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் மறைவு தமிழகத்தில் மிகக் கடுமையான சூழல்களை உருவாக்கியுள்ளது.

தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பதைப் போல் இப்போது சிலர் ஜாதிப் பெருமை பேசியும், ஜாதி மோதலை ஏற்படுத்தும் வகையிலும் பேசி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடைபெற்ற முக்குலத்தோர் புலிப்படை கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ கருணாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரை தேவையில்லாமல் ஜாதி குறித்துப் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஜாதிப் பெயரைச் சொல்லி அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மோதலைத் தூண்டும் வகையிலே இருந்தது. என்ன செய்ய முடியும்? எனக்குப் பின்னால் எனது சமுதாய மக்கள் இருக்கிறார்கள் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதையடுத்து அவர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நெல்லையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, நடிகர் ஒருவர் தன்னிடம் நீங்கள் ஓபனாக ஜாதி கூட்டங்களில் கலந்து கொள்கிறீர்களே? உங்கள் மீது ஜாதி சாயம் பூசிவிட மாட்டார்களா என கேட்டார்.

நான் என் மேல் ஜாதி சாயம் பூசப்படுவதை மிகவும் விரும்புகிறேன், ஏனென்றால், தேவன் தேவன்தான் என கூறியதாக தெரிவித்தார். சினிமாத்துறையில் உங்களுக்கு எப்படி செல்வாக்கு கிடைத்தது என அவர் கேட்டபோது, அது என்னோட ஜாதியால் தான், ஏன்னா நான் தேவன் என்று மீண்டும், மீண்டும் ஜாதிப் பெருமை பேசி அங்கிருந்தவர்களுக்கு குளுகோஸ் ஏற்றினார்.

அந்த இரு மாபெரும் தலைவர்கள் இருந்தவரை இது போன்ற ஜாதி ஆணவப் பேச்சுக்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தன. தற்போது அது மீண்டும் தலைதூக்கியுள்ளது.

தமிழகம் என்பது பெரியார் பூமி. இங்கு ஜாதி, மத வெறியைத தூண்டி தங்கள் சுயலாபத்துக்காக செயல்படுபவர்களை மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை.

அதே நேரத்தில் தமிழக அரசும் ஜாதி, மத மோதல்களை தூண்டிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே மனிதாபிமானம் மிக்க மக்கள் விரும்புகிறார்கள்.