நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை பரமக்குடியில் அவரது தந்தை டி.சீனிவாசனின் சிலையைத் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் நடிகர் பிரபு, ‘அண்ணன் 5 வயதில் சினிமாவுக்கு வந்தாராம். இப்போது அவருக்கு 65 வயது ஆகிவிட்டதாம். அவரைப் பார்க்க அப்படியா தெரிகிறது? மாஸ்டர் கமல்ஹாசன் மாதிரி இருக்கிறார். அண்ணன் கமல் மீது அப்பாவுக்கு அளவு கடந்த பிரியமிருந்தது. என் திரையுலக வாரிசு கமல் மட்டும்தான் என்று அப்பா அடிக்கடி சொல்வார்.

தொழில்நுட்ப விஷயங்களை எல்லாம் கற்றுக்கொண்டு என் தோள் மீது ஏறிக் கொண்டு திரையுலகைப் பார்க்கிறான்டா என அப்பா குறிப்பிடுவார். அந்த அளவுக்கு என்னை விடத் தொழில்நுட்பம் அதிகமாகவே தெரிந்தவர் என அண்ணன் கமலை அப்பா பாராட்டுவார். எங்க குடும்பம் ரொம்பப் பெரிசு. புள்ளைக் குட்டிகளோ பத்து தினுசு' என்று எங்க வீட்டில் பாடியது மாதிரி, இன்று அண்ணன் கமலைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன்பு அவரை இப்படிப் பார்த்ததில்லை. அவருடன் குடும்பத்தைப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாக உள்ளது.

அவர் மனசுக்குள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ரொம்ப மென்மையானவர். அன்பால் அவரை அடித்துத் துவைத்து விடலாம். அன்புக்கு அடிமை எங்கள் அண்ணன் கமல்தான். திருமதி சாருஹாசன் இங்கு பேசும்போது, அவரை ஜனாதிபதியாகப் பார்க்க வேண்டும் என்றார். உங்களைப் போல் நானும் அவரை ஜனாதிபதியாகப் பார்க்க ஆசைப்படுகிறேன். இந்தத் தம்பிகளை எல்லாம் அழைத்ததற்கு ரொம்ப நன்றி'' என்று அவர் பேசினார்.