Actor Parthiban responded to actor Sathyaraj! Did you know what he said

ரஜினி, கமல் சினிமாக்காரர்கள் என்று யாரும் எண்ணி ஒதுக்கிவிட வேண்டாம் என்றும் சினிமாவில் சம்பாதித்து சேர்த்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார்கள்; அதனால் அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் சத்யராஜ் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் பார்த்திபன் பேச்சு அமைந்துள்ளது.

திராவிட இயக்க தமிழர் பேரவையின் சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்திகளாகி வருகிறது. நடிகர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்து இருக்கிறார்கள். ஏன் நானே 3 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன். பிரபல நடிகர்கள் என்பதால் எல்லாம் தெரிந்தவர்கள் என்று அவர்களை ஒருபோதும் நம்பி விடாதீர்கள். அவ்வாறு நினைப்பது தவறு என்றார். நடிகர்கள் அரசியலில் தோற்றால் அதுபெரிய தோல்வியெல்லாம் இல்லை. வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்னவாகும் என்பதை யோசியுங்கள். எனவே நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

சத்தியராஜின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் பார்த்திபன், ரஜினியும் கமலும் நேரில் சந்தித்து பேசியிருப்பது அவர்களின் ஆரோக்கிய அரசியலை காட்டுகிறது அவர்களை சினிமாக்காரர்கள் என்று யாரும் ஒதுக்கிவிட வேண்டாம் என்று கூறியுள்ளார். சினிமா பட தயாரிப்பாளர் சிவாவின் இல்ல திருமண விழா வரவேற்பு ஈரோட்டில் நடைபெற்றது.

அப்போது கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் ரஜினியும், கமலும் நேரில் சந்தித்து பேசியிருப்பது அவர்களின் ஆரோக்கிய அரசியலைக் காட்டுகிறது. அவர்களை சினிமாக்காரர்கள் என்று யாரும் எண்ணி ஒதுக்கி விடக்கூடாது. அவர்கள் நடித்து சம்பாதித்து சேர்த்த பணம் எல்லாம் மக்கள் கொடுத்தது. அந்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள். அவர்களை நம்பலாம். அதற்காக இவருக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். நான் யாருக்கு ஆதரவு எனவும் இப்போது சொல்ல மாட்டேன். தேர்தல் வரும் சமயத்தில் அதை தெரிவிப்பேன். இவ்வாறு நடிகர் பார்த்திபன் கூறினார்.