காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு இன்று தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கடந்த சில தினங்களாக டுவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பதிவிட்டார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு வாழ்த்து சொல்வதில் எந்த தவறும் இல்லை எனவும் அவர் கூறி வந்தார். இதையடுத்து கடந்த சில தினங்களாக நடிகை குஷ்பு, பாஜகவில் இணைய உள்ளதாக வதந்தி பரவியது. ஆனால், இதை குஷ்பு திட்டவட்டமாக மறுத்தார். இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்புகூட சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட குஷ்பு ஒரு ட்விட்டருக்கு இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு வதந்தி பரப்புகின்றனர் என பாஜகவை சரமாரியாக சாடினார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றுவிட்டு திரும்பிவந்த நடிகை குஷ்பு, நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென அவசரம் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். உடனே குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை குஷ்பு சோனியாகாந்திக்கு எழுதிய கடித்தத்தில், காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். 

இந்நிலையில், நடிகை குஷ்பு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடனிருந்தார்.