காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தனது உழைப்பால் கதாநாயகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக பல்வேறு அவதாரங்கள் எடுத்தவர் கருணாஸ். சினிமா உலகில் உச்சத்தில் இருந்தபோதே முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் ஜாதிய இயக்கம் தொடங்கினார். பலராலும் விமர்சிக்கப்பட்ட நிலையிலும் அதை எல்லாம் பொய்யாக்கி கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திருவாடனை தொகுதி எம்எல்ஏவாகி காட்டினார் கருணாஸ். கடினமான உழைப்பாளி என்ற பெயர் எடுத்த கருணாஸ் தற்போது தேர்தல்அரசியல் வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை திருவாடனை தொகுதியில் வென்றாலும் கூட அந்த தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் கருணாசால் நிறைவேற்ற முடியவில்லை. மேலும் சசிகலா, எடப்பாடி அரசியலுக்கு இடையே சிக்கி தனது இயல்பான அரசியல் நிலைப்பாட்டையும் கருணாஸ் தொலைத்துவிட்டார். போதாக்குறைக்கு குறிப்பிட்ட சமுதாயத்தை குறித்து மிகவும் அவதூறாக பேசி அந்த சமுதாயத்தை பகைத்துக் கொண்டார். இருந்தாலும் கூட அதன் பிறகு பக்குவமான அரசியல்வாதி என்ற பெயர் எடுத்தாலும், கூவத்தூரில் கருணாஸ் செய்தது என்ன? என்கிற விவாதம் தற்போது வரை ஓயவில்லை.

இதற்கிடையே சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ் கடந்த வெள்ளியன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை. சுமார் ஐந்து நாட்களாக நடைபெற்ற கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. இத்தனைக்கு சிஏஏ எதிர்ப்பு உள்ளிட்ட விஷயங்களால் சட்டப்பேரவையில் எதிர்கட்சியினர் அமளி செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள கருணாஸ் சட்டப்பேரவைக்கு வராதது ஏன் என்கிற கேள்விஎழுந்தது. இதற்கு கருணாஸ் கொடுத்த பதில், சட்டப்பேரவையில் அனைவரும் நடிகர்களாக இருக்கிறார்கள்  என்பது தான். அதாவது சட்டப்பேரவைக்கு தான் சென்று ஒன்றும் ஆகப்போவதில்லை என்று உணர்ந்து விரக்தியில் கருணாஸ் பேசி வருகிறார். மேலும் எம்எல்ஏவாக இருந்து கொண்டு சட்டப்பேரவைக்கு செல்ல விரும்பாத கருணாஸ் அடுத்த தேர்தலிலும் போட்டியிட தயாராக இல்லை என்கிறார்கள். எம்எல்ஏ பதவி மூலம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத சூழலில் அந்த பதவி எதற்கு என்று பேசி வருகிறாராம் கருணாஸ். மேலும் கடந்த சில நாட்களாக மீண்டும் சினிமா உலகில் நாயகனாக களம் இறங்க கருணாஸ் கதை கேட்க ஆரம்பித்துள்ளாராம்.

இளம் இயக்குனர்கள் தொடங்கி முன்னணி இயக்குனர்கள் பலரையும் சந்தித்து நடிக்கவும் வாய்ப்பு கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு ஏற்கனவே சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமா, அரசியல் என தொலைத்த நிலையில் மீண்டும் சினிமா எடுத்து அந்த பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று படத் தயாரிப்பில் இறங்கலாமா என்கிற யோசனையில் கூட கருணாஸ் இருப்பதாக சொல்கிறார்கள்.