மனித உரிமை காக்கும் கட்சி என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடத்திவரும் நடிகர் கார்த்திக், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு தேர்தல் அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுபவர் நடிகர் கார்த்திக். தேர்தல் காலத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக தினந்தோறும் பேட்டி கொடுப்பார். அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திப்பார். தனியாகத் தேர்தலை சந்திப்பதாகச் சொல்வார். கடந்த 2011-ம் ஆண்டில் நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை நடத்திவந்தார் நடிகர் கார்த்திக். இவரது கட்சி வேட்பாளர்கள் கடத்தப்பட்டுவிட்டதாகப் பரபரப்பு புகார் கூறினார். 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பார் என்று பேசப்பட்டது. ஆனால், கடைசியில் அந்த முயற்சி கைகூடவில்லை. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகிவிட்ட நிலையில் நடிகர் கார்த்திக் நடத்திவரும் மனித உரிமை காக்கும் கட்சியின் நிலை பற்றி தெரியாமல் இருந்தது.

 

இந்நிலையில் அதிமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து தனது கட்சியின் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசும்போது, “அதிமுக கூட்டணிக்கு நான் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.