ரஜினி, கமல் இருவருக்கும் அடிவயிறு கலங்கும் வகையில் புதிய அரசியல் கட்சியுடன் மறுபடியும் அதிரடியாக களம் இறங்கியுள்ளார் நடிகர் கார்த்திக் முத்துராமன். இதன்மூலம் தமிழக முதல்வர் பதவிக்கான போட்டியாளர்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்திருக்கிறது.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்த கார்த்திக், அக்கட்சியின் தமிழ் மாநிலதலைவராகவும் இருந்தார். பின்பு அதிருப்தியுடன் அதிலிருந்து விலகி நாடாளும் மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்கினார். அக்கட்சி பாரதிய ஜனதாவுடன் கூட்டு அமைத்துப் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட டெபாஸிட் பெறவில்லை. இதனால் மனம் வெறுத்துப்போய் அரசியலில் இருந்து தொடர்பு எல்லைக்கு வெளியே போனார்.

தற்போது ரஜினியும் கமலும் அரசியலில் பரபரப்பு ஏற்படுத்திவரும் நிலையில் கார்த்திக்குக்கு மீண்டும் அரசியல் ஆசைவந்துவிட்டது. இப்போது கட்சிக்கு அவர் வைத்திருக்கும் பெயர் மனித உரிமை காக்கும் கட்சி. நேற்று நெல்லையில் இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த கார்த்திக் கட்சியின் பெயரையும், கொடியையும் நிருபர்களுக்கு அறிவித்தார்.

பின்னர் பேசிய கார்த்திக்,’ நான் இருந்தவரை அரசியலில் மிக நேர்மையாகவே இருந்தேன். ஆனால் ஃபார்வர்ட் பிளாக்கிலும், நான் தனித்து துவங்கிய நாடாளும் மக்கள் கட்சியிலும் இருந்தவர்கள் என் முதுகில் குத்தினார்கள். அதனால்தான் அக்கட்சியைக் கலைத்துவிட்டேன். இனி நான் புதிய அரசியல்வாதி. கமல், ரஜினியை விட அரசியலில் நான் சீனியர். ஒவ்வொரு தனி மனிதனின் உரிமைக்கு குரல் கொடுக்கும் கட்சியாக எனது கட்சி செயல்படும். விரைவில் அம்பாசமுத்திரத்தில் கட்சியின் மாநாட்டை பெரிய அளவில் நடத்தி, எனது அரசியல் குறிக்கோள், கொள்கைகளை அறிவிப்பேன்’ என்றார்.

மறுபடியும் முதல்ல இருந்து அரசியல் சேவையைத் துவங்கும் கார்த்திக்கை இனியாவது அவரது சமூகம் திரும்பிப் பார்க்குமா?