Actor kamal will stop to acting in films

முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதால் நடிகர் கமல்ஹாசன் தற்போது தான் நடித்து வரும் இந்தியன் -2 படத்துடன் நடிப்புக்கு முழுக்குப் போடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் கமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் -2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஸ்வரூபம் -2 படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளிவர தயாராக உள்ளது.

சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பும் ஓரளவு முடிந்துவிட்டன. இந்த படங்களைத் தவிர டைரக்டர் ஷங்கர் இயக்கும் இந்தியன் -2 படத்திலும் நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான் கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். வரும் 21 ஆம் தேதி ராமேஸ்வரம் அப்துல் கலாம் இல்லத்தில் புதிய கட்சி, பெயர், கொள்கைகள் போன்றவற்றை கமல் அறிவிக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து மதுரையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார்.

தற்போது நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ள தமிழர்ளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அமெரிக்க வாழ் தமிழர்களிடையே நேற்று அவர் பேசும்போது, தான் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், திரைப்படங்களில் நடிக்க டைம் கிடைக்குமா தெரியவில்லை என குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் அமெரிக்காவில் இருந்து வந்ததும் தற்போது தான் நடித்து வரும் படங்களை விரைவில் முடித்துக் கொடுக்கும் வேலையில் கமல் ஈடுபடுவார் என தெரிகிறது.

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது அவரது ரசிகர்களை உச்சபட்ச மகிழ்ச்சியில் இருந்தாலும் அவர் இனி சினிமாவில் நடிப்பாரா என்று எழுந்தீள்ள சந்தேகத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.