டெல்லி கலவரம் தொடர்பாக பாஜக அரசை நடிகர் ரஜினி கண்டித்துள்ள நிலையில், அதை வரவேற்று கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 
சிஏஏ போராட்டத்தில் டெல்லியில் நடந்த கலவரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். எங்கே ரஜினி குரல் கொடுக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் சில அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினியைக் கிண்டலடித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது டெல்லி கலவரம் தொடர்பாக மோடி அரசைக் கண்டிப்பதாக தெரிவித்தார். 
அவர் கூறுகையில், “டெல்லியில் நடைபெறும் கலவரத்துக்கு உளவுத்துறையின் தோல்விதான் காரணம். மத்திய அரசின் உளவுத்துறை சரியாகச்  செயல்படாததையே இதைக் காட்டுகிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சிஏஏ போராட்டத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். இனியாவது வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையென்றால் ராஜினாமா செய்ய வேண்டியதுதான். போராட்டம் எப்போதும் வன்முறையாக மாறக் கூடாது, அமைதியாக நடைபெறலாம்.” என்று ரஜினி தெரிவித்திருந்தார்.


ரஜினி பேட்டி வெளியான நிலையில், அதை வரவேற்று நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் ட்விட் மூலம் வரவேற்பு  தெரிவித்திருந்தார். அவருடைய ட்வீட்டில், “சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க, இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை வருக வாழ்த்துகள்” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.