நடிகர் கமல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியரை பணியில் சேர்க்க மறுப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என அவர்களின் வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.  இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் வீட்டிலும் கொரோனா ஸ்டிக்கர்  ஒட்டப்பட்டது. மாநகராட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில் கொரோனாவில் இருந்து எங்களையும், சென்னையையும், காக்க தனிமைப் படுத்திக் கொண்டோம் என்று எழுதப்பட்டிருந்தது.  அதில் கமல்ஹாசனின் பெயர் மற்றும் முகவரி இடம்பெற்றிருந்தது. எனினும் வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஒட்டப்படும் உள்ளே நுழையக்கூடாது என்ற எச்சரிக்கை வாசகங்கள் இந்த ஸ்டிக்கரில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் கமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டது, இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள்  கூறுகையில் பாஸ்போர்ட் அடிப்படையில் வந்த தகவலை அடுத்து கமல் ஹாசனின் கட்சி அலுவலகம் பயன்படுத்தப்பட்ட நிலையில் அங்கு நோட்டீஸ் ஒட்டியதாகவும். இதையடுத்து இந்த அலுவலகத்தில் யாரும் இல்லை என தகவல் வந்ததையடுத்து நோட்டீசை அப்புறப்படுத்தியதாகவும் விளக்கமளித்தனர். முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்த சிறிய தவறு நடந்திருப்பதாக மாநகராட்சி ஆணையரும் விளக்கம் அளித்திருந்தார. அதே நேரத்தில் ஸ்டிக்கர் ஒட்டிய மாநகராட்சி ஊழியர் வினோத் குமார் என்பவரும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.  இந்நிலையில் தனது விஷயத்தில் மனித உரிமை மீறல் நடந்திருப்பதாகவும், தனக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்த வேண்டும் எனவும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வினோத் குமார் புகார் அளித்தார்.

கொரோனா காரணமாக நடிகர் கமல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியர் வினோத்  குமாருக்கு மீண்டும் பணி வழங்க மாநகராட்சி மருத்துவரும் நிலையில்,  இது தொடர்பாக செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் காலை 10:30 மணிக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.