தரம் தாழாதீர்கள், வைது சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும், நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை எனவும், இவருக்கு பதிலளிக்க நானே போதும் எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக தமிழக அமைச்சர்களின் கடுப்புகளுக்கு அவர் ஆளானார்.

இது தொடர்பாக கமலுக்கும், அமைச்சர்களுக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. ஊழல் குற்றச்சாட்டு குறித்து பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது என்று அமைச்சர்களும், ஊழல் குறித்த விவரங்களை அத்துறைக்கு அனுப்புமாறு நடிகர் கமலும் கூறியிருந்தனர்.

இதைதொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுக்கு பல்வேறு ஆதரவுகள் எழுந்துள்ள நிலையில், அவரின் ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி அண்மையில், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் நடிகர் கமல் ஹாசன் ரசிகர்கள் சார்பில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

அதில், வாக்களித்தவனுக்கு கேள்வி கேட்கும் உரிமை கிடையாதா? சுயநலபோதையில் திரியும் நீங்கள் பொதுநலப் பார்வையில் பேசிய ஒரு சாமானியரை உலக நாயகனை சீண்டிப் பார்க்காதே என்று கூறப்பட்டிருந்தது.

பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இத்தகைய போஸ்டரால் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்பட்டது.

இந்நிலையில், தரம் தாழாதீர்கள், வைது சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும், நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை எனவும், இவருக்கு பதிலளிக்க நானே போதும் எனவும் நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.