நான் ஊழல்களுக்கு எதிரானவன், கட்சிகளுக்கு அல்ல என்றும், கட்சி,நட்பு,குடும்பம் பேதம் கிடையாது எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அண்மையில் கருத்து  தெரிவித்திருந்தார். இதன் காரணமாக தமிழக அமைச்சர்களின் கடுப்புகளுக்கு அவர் ஆளானார்.

இது தொடர்பாக கமலுக்கும், அமைச்சர்களுக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. ஊழல் குற்றச்சாட்டு குறித்து பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது என்று அமைச்சர்களும், ஊழல் குறித்த விவரங்களை அத்துறைக்கு அனுப்புமாறு நடிகர் கமலும் கூறியிருந்தனர்.

இதைதொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுக்கு பல்வேறு ஆதரவுகள் எழுந்துள்ள நிலையில், அவரின் ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசை ஊழல் அரசாகக் கூறும் கமல், திமுக ஆட்சியில் இருந்த போது விமர்சித்தாரா என்ற கேள்வி அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் 2 ட்விட்டர்களை பதிவு செய்துள்ளார்.

அதில், "என் பிரகடனத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்" என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு ட்விட்டரில், நான் ஊழலுக்கு எதிரானவன் என்றும் ஒரு கட்சிக்கு எதிராக நான் போராடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். புரட்சியாளர்களுக்கு எதிராக தான் கிளர்ந்தெழுந்துள்ளதாகக் கூறும் கமல், மரணம் அல்லது தோல்வியைக் கண்டு அஞ்சவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.