மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் நடிகர் கமலஹாசன் தனது கட்சியின் கொடியை ஏற்றி தமது கட்சியின் பெயரை அறிவித்தார். கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார்.  

நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். 

இன்று காலை அவரது வீட்டிற்கு சென்ற கமல் அப்துல்கலாமின் சகோதரரிடம் ஆசி பெற்று கலாமின் பேரனிடம் நினைவு பரிசையும் பெற்றார். 

அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அந்த திட்டத்தை ரத்து செய்தார். ஆனாலும் பள்ளியை பார்த்தபடியே அவ்வழியாக வாகனத்தில் சென்றார். 

பின்னர் ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து கலாமின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலியும் செலுத்தினார். பின்னர் பரமக்குடியிலும் மானாமதுரையிலும் வாகனத்தில் இருந்தபடியே பேசினார். 

இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று மாலை நடிகர் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சி கொடியை ஏற்றி கட்சியின் பெயரையும் கொள்கைகளையும் அறிவிக்க உள்ளதாக ஏற்கனவே அரிவித்திருந்தார். இந்நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுரை வந்திருந்தார்.  

அவரை சந்தித்த கமல் இருவரும் ஒரே காரில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு கிளம்பினர். மைதானத்தை அடைந்த பின் நடிகர் கமலஹாசன் தனது கட்சியின் கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தினார். அவருடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தார். 

கொடி வெள்ளை நிறத்தில் 6 கரங்கள் ஒன்றோடு ஒன்று இருக்க பிடித்துள்ள நிலையில் உள்ளது. 

பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் கமலஹாசன் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார்.