இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "தமிழகத்தில் பெரும்பாலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில், எளிமையாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. பொருளாதார பின்னடைவைச் சீர்செய்வதற்கான நடவடிக்கையாகப் பல வணிக நிறுவனங்கள், தொழிற்நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா தொழில்கள் செயல்பட தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருப்பதால், படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது.


இந்நிலையில் சுய வாகனம் இல்லாத மக்கள் சிரமமின்றி தங்கள் பணியிடங்களுக்கு சென்று வரவும், அவசிய தேவைகளுக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கும் தனியார் வாகனங்களை பயன்படுத்தும்போது அதிக பொருளாதாரத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சுய வாகனம் இல்லாமல், தினசரி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள பணியாளர்களும், கட்டிட தொழிலாளர்களும், மின்சார சம்பந்தமான வேலை செய்பவர்களும், பிளம்பர்களுக்கும் மொத்தத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று பணிபுரியும் அனைவரும் பொது போக்குவரத்து சேவை எப்போது தொடங்கும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்கு பொது போக்குவரத்து அவசியம் என கருதுகிறேன்.


முகக்கவசம் கட்டாயம் அணியும் போதும், 3 அடி தொலைவுக்கு ஒருவருக்கு ஒருவர் இடைவெளியை பராமரிக்கிறபோதும், கிருமிநாசினி தெளித்து வாகனத்தை துப்புரவாக வைத்துக் கொள்ளும்போதும் தொற்று பரவும் வாய்ப்பு குறையும் என நம்புகிறேன். வேலைக்கு சென்றால்தான் அன்றைய தின வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் உள்ள எளிய தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் கடினமான சூழலை கருத்தில் கொண்டு குறைந்த செலவில் ஏதுவாக பயணம் மேற்கொள்ள, உரிய வழிகாட்டு நெறிமுறையுடன் பொது போக்குவரத்திற்கு முதல்வர் அனுமதியளிக்க வேண்டும் என சமக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று அறிக்கையில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.