அரசியல் குறித்து அஜித் அதிரடி..!

நடிகர் அஜித்துக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி சின்ன குழந்தைகளுக்கு கூட பிடிக்குமோ... அதே போன்று நடிகர் அஜித் மற்ற ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நபர்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான விசுவாசம் படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று இன்றளவும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் பெரும் ஆதரவாலும், அன்பாலும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் அஜித், தற்போது தான் அரசியல் குறித்து  முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதன் படி,

"தான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம். சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும், இந்த பின்னணியில் தான், என் மீதும்  என் ரசிகர் மீதும்,என் ரசிகர் இயக்கங்களின் மீதும் எந்தவிதமான அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்று நான் சிந்தித்து எடுத்த சீரிய முடிவு அது...

என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயர், என் ரசிகர்கள் பெயரையோ சம்பந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றது, தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்ற ஐயப்பாட்டை பொதுமக்களிடையே ஏற்படுத்தும். இந்த தருணத்தில் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொதுஜனம் ஆக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு.

என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள்.. வாக்களியுங்கள் என்று எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை. நான் சினிமாவில் நடிப்பது மட்டுமே என் தொழில்.அரசியல் செய்ய நான் இங்கு வரவில்லை.  என் ரசிகர்களுக்கும் அதைத்தான் நான் வலியுறுத்துகிறேன்.

அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டையும் நான் தெரிவிப்பதில்லை ரசிகர்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சமூக வலைத்தளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை விமர்சனங்களை ஏற்படுத்தி, வசைபாடுவதை நான் என்றுமே ஆதரிப்பது இல்லை. நம்மை உற்றுப்பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை.

அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு அதை நான் யார் மீதும் திணிப்பதில்லை. மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதுமில்லை. ரசிகர்களிடம் இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும். என் பெயரையும் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளிலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை. எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும் தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும் சட்டம் ஒழுங்கை மதித்து நடந்து கொள்வதும் ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும் வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவது ஆகியவை தான்.. அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு .வாழு வாழ விடு.
 
இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.