திமுக ஆட்சி அமைத்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெரும்பாலான திட்டங்களில் மக்கள் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. இதேநேரத்தில் கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில் மாநிலத்தின் வரி வருவாயைப் பெருக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.

சொத்து வரி செலுத்தாத தனியார் பள்ளிகள் ஜப்தி செய்யப்படும் என உள்ளாட்சி நிர்வாகம் அதிரடியாக எச்சரித்துள்ளதுடன், அப்பள்ளிகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. இது தனியார் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சி அமைத்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெரும்பாலான திட்டங்களில் மக்கள் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. இதேநேரத்தில் கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில் மாநிலத்தின் வரி வருவாயைப் பெருக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது. முறையாக மாநில அரசுக்கு வர வேண்டிய வரிகளை வசூலிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் கூடுதல் வரிவிதிப்புகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபோன்ற வரிவிதிப்புகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. வரவேண்டிய வரிவருவாயை முழுமையாக வசூலித்தாலே ஓரளவுக்கு நிதியை ஈட்ட முடியும் என அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தவரிசையில் பள்ளிகளுக்கு சொத்து வரி, பள்ளி வாகனங்களுக்கு இருக்கை வரி உள்ளிட்ட வரிகளை தமிழக அரசு விதித்துள்ளது. நர்சரி பிரைமரி பள்ளிகள் ஆன்லைனில் மட்டுமே பாடம் நடத்தப்படுவதால் சொத்துவரி, வாகன இருக்கை வரி உள்ளிட்டவைகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை சங்கம் கோரிக்கை வைத்தது. இந்நிலையில் ஏராளமான தனியார் பள்ளிகள் சொத்துவரி செலுத்தாமல் வரிகளை நிலுவை வைத்துள்ளன. இந்நிலையில் சென்னை, தாம்பரம், வேலூர், தூத்துக்குடி நகராட்சி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி செலுத்துமாறு உள்ளாட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன, பல இடங்களில் தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூல் செய்யப்படாமல் இருந்து வருகிறது, இந்நிலையில் தனியார் பள்ளிகள் சொத்து வரி செலுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய உள்ளாட்சி அமைப்புகள் தனியார் பள்ளிகளுக்கான சொத்து வரியை கட்ட வேண்டுமென பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி வருகிறது. சொத்து வரி கட்டாத பள்ளி நிர்வாகிகளை எச்சரிக்கும் வகையில் சொத்து வரி கட்ட தவறினால் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி செலுத்த கூறி உள்ளாட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சொத்து வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெற்றோர் மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்தாமல் உள்ள நிலையில், உள்ளாட்சித் துறையில் இந்த நடவடிக்கை பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சொத்துவரி செலுத்துவதற்கு உரிய கால அவகாசம்தர வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகிகள் அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.