Asianet News TamilAsianet News Tamil

AIADMK : கொரோனா காலத்துல கூட இவ்வளவு உயரல… காய்கறிவிலைய குறைக்க நவடிக்கை தேவை… ஓ.பி.எஸ் வேண்டுகோள்!!

காய்கறிகளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

Action is needed to reduce vegetable prices said ops
Author
Tamilnadu, First Published Dec 6, 2021, 2:50 PM IST

AIADMK : காய்கறிகளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அண்மையில் பெய்த கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைவானதால், காய்கறிகளின் விலை, குறிப்பாக தக்காளியின் விலை ஏறிக் கொண்டே சென்றதையடுத்து, இதைக் கட்டுப்படுதும் வகையில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மலிவு விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எனது அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்தேன். இதனையடுத்து, தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக காய்கறிகள் விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் தக்காளி கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், இதன்படி கூட்டுறவுத் துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் தரமான காய்கறிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள நகர்ப்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட நியாய விலைக் கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், இது தவிர நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமும் விற்பனை செய்யப்படுவதாகவும், அரசின் இந்த நடவடிக்கையால் தக்காளி மற்றும் இதர காய்கறிகளின் விலை வெளிச் சந்ததையில் கணிசமாக குறைந்துள்ளதாகவும் கூட்டுறவுத் துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட 24-11-2021 நாளைய செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Action is needed to reduce vegetable prices said ops

அறிவிப்பு வெளியிட்டு 10 நாட்கள்கூட முடியாத நிலையில், தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளால் தற்போது வெளிச்சந்தையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாகவும், இதனால் ரேஷன் கடைகளில் தற்போதைக்கு காய்கறிக்கு விற்கப்படாது என்றும், அதேசமயம் பண்ணை பசுமை கடைகளில் தொடர்ந்து குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அதாவது, நியாய விலைக் கடைகள் மூலம் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படவே இல்லை என்பதுதான் யதார்த்தம். இதற்குக் காரணம், சென்ற முறை வெங்காயம் நியாய விலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டபோது, விற்பனையாகாத வெங்காயத்திற்கான பணத்தை ஊழியர்களிடம் அதிகாரிகள் வசூலித்ததாகவும், எனவே விற்பனையாகாத காய்கறிகளுக்கு பணம் வசூலிக்கப்படாது என்று உறுதி அளித்தால் காய்கறி விற்பனை செய்ய ஒத்துழைப்பு அளிப்போம் என ஊழியர்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இதில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்ந்து, ஊழியர்களுடன் கலந்து பேசி, ஒரு தீர்வினைக் கண்டு, நியாய விலைக் கடைகள் மூலம் காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்காமல், அந்தத் திட்டத்தையே கைவிடுவது என்பது ஏற்கக்கூடியது அல்ல. இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்கள்தான் என்பதை புரிந்துகொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை. 24-11-2021 அன்றைய காய்கறிகளின் வெளிச்சந்தை விலையையும், தற்போதைய விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அனைத்துக் காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஆனால், செய்திக் குறிப்பிலோ அரசின் நடவடிக்கைகளால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Action is needed to reduce vegetable prices said ops

24-11-2021 அன்று வெளிச் சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஒரு கிலோ தக்காளி தற்போது வெளிச் சந்தையில் 125 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் 150 ரூபாய்க்கும், 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் 135 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில காய்கறிகளைத் தவிர அனைத்துக் காய்கறிகளின் விலையும் 100 ரூபாய்க்கு மேல் வெளிச்சந்தையில் ஆங்காங்கே விற்பனை செய்யப்படுகிறது. நியாய விலைக் கடைகள் மூலம் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் அரசுக்கு விளம்பரம் கிடைத்ததே தவிர மக்களுக்கு எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. மக்கள் கண்ணீர் விடும் அளவுக்கு காய்கறிகள், பழங்கள், பூக்களின் விலைகள் ஏறிக் கொண்டே செல்கின்றன. மளிகைப் பொருட்களை விட காய்கறிகளுக்கு மக்கள் அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா உச்சத்தில் இருக்கும்போது கூட இந்த அளவுக்கு காய்கறிகளின் விலை உயரவில்லை . அப்பொழுதெல்லாம் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சராக வந்து பிறகு அதைவிட பன்மடங்கு காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே வருவதைப் பற்றி பேசாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அனைத்துக் காய்கறிகளின் விலையையும் குறைந்தபட்சம் பாதியாகவாவது குறைக்கும் அளவுக்கு, அனைத்து நியாய விலைக் கடைகள் மூலமும் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios