போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப தமிழக அரசு கொடுத்திருந்த அவகாசம் முடிவுக்கு வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து பள்ளிக் கல்விதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘’தற்போது வரை பள்ளிக்கு வருவதை உறுதி செய்யாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை உறுதி. பள்ளிக்கு வராததை உறுதி செய்யாத ஆசிரியர்கள் நாளை முதன்மை கல்வி அலுவலரை சந்திக்க வேண்டும். உரிய விளக்கம் கொடுத்த பின்னர் முதன்மை கல்வி அலுவலர் கூறும் பள்ளியில் பணியாற்றலாம். பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் முடிவுக்கு வந்தது. பணியில் சேராத ஆசிரியர் பணியிடங்கள் காலி இடங்களாக கணக்கிட்டு துறை இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.   

கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்ததோடு மட்டுமன்றி, அவர்களை பணியிடை நீக்கம் செய்து, அப்பதவிகளுக்கான காலியிடங்கள் இருப்பதாகவும் அறிவித்தது. இந்நிலையில் இன்று காலை 9 மணிக்குள் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்று காலக்கெடு விதித்திருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் தங்களின் பள்ளிகளுக்குச் செல்லவும், அதற்கு முன்பு மாவட்ட கல்வி அலுவலர்களிடம் அவர்களின் வருகையை அறிவிக்கவும் கேட்டக்கொள்ளப்பட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை என பள்ளிக்கல்வித்துறை மீண்டும் கெடு விதித்தது. 

இதை மீறும் பட்சத்தில் தொடர்ந்து போராடும் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் சரியான விளக்கம் அளிக்காவிடில் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் எனவும்தகவல் வெளியாகியானது. 

இந்தநிலையில், பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த சூழலில் இரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாகும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் ஆசிரியர்களுக்கு அளித்த அவகாசத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.