வருத்தப்படாத வாலிபர் சங்கம்,கண்ணே கலைமானே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள சரவண மல்டி பெசால்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால், திரைத்துறை மற்றும் பொதுமக்களின் உதவி கேட்டு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். நடிகர் தவசியின் உடல்நிலையை அறிந்த பல நடிகர்கள் தற்போது அவருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர் சூரி 20,000 ரூபாயும், சிவகார்த்திகேயன் 25,000 ரூபாயும், நடிகர் விஜய் சேதுபதி தவசிக்கு ஒரு லட்ச ரூபாயும் வழங்கி உதவினர்.இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் ரஜினி, அவரது உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

நடிகர் தவசிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவரும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவுமான டாக்டர்.சரவணனிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டோம். நடிகர் தவசிக்கு புற்றுநோய் முற்றிய நிலையில் இருக்கிறார்.அவருக்கு உணவுக்குழாயில் உள்ள பிரச்சனை சரிசெய்யப்பட்டிருக்கிறது. அதோடு அவருக்கு செண்ட் வைக்கப்பட்டுள்ளது. தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். ஆனாலும் முழுமையாக குணப்படுத்த முடியாது. நடிகர் தவசிக்கான முழு மருத்துவ செலவையும் நானே ஏற்றிருக்கிறேன்.என்றார்.