நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு உலகின் பல நாடுகளில் இருந்து திடீரென நிதி உதவி குவிந்து வருவதாக தகவல்கள் கசிந்தன.

நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி.டி.வி. தினகரன் கட்சியின் வேட்பாளர்களை விட நாம் தமிழர் வேட்பாளர்கள் பல தொகுதிகளில் பல மடங்கு அதிக வாக்குகளை பெற்றனர். இதனால் தமிழகத்தின் புதிய அரசியல் சக்தியாக நாம் தமிழர் உருவாகிவிட்டதாக கூட பில்டப்புகள் கொடுக்கப்பட்டன.

ஆனால் தேர்தல் முடிந்த பிறகு சீமான் மிகவும் அமைதியாகிவிட்டார். இதற்கான காரணத்தை விசாரித்த போது தான் சீமான் சட்டப்பேரவை தேர்தலுக்கு தற்போது முதலே தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற தொகுதி உள்ளிட்ட விவரங்களை கணக்கெடுத்து தற்போது முதலே அங்கு களப்பணியாற்றி நாம் தமிழர் கட்சியினர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதே சமயம் தேர்தல் பணிகளுக்கு தேவையான நிதிப்பற்றாக்குறை கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. இதனை தீர்க்கும் பொருட்டு உலகத் தமிழர்களிடம் நேரடியாகவே சீமான் தரப்பில் இருந்து நிதி கோரப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போதைய சூழலில் தமிழ்த்தேசிய கொள்கை கொண்ட கட்சிகளில் நாம் தமிழர் தான் முன்னணியில் உள்ளது.

இதனால் தமிழர்கள் பலரும் மனம் உவந்து நாம் தமிழர் கட்சிக்கு நிதி உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் கணிசமான தொகை நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கில் டெபாசிட் ஆகியுள்ளதாக சொல்கிறார்கள். இந்த தொகை இதற்கு முன்பு எந்த மாதமும் கிடைக்காத தொகை என்றும் கூறுகிறார்கள். இதற்கு காரணம் நாடாளுமன்ற தேர்தலில் சீமான் செய்த பிரச்சாரமும் அதன் மூலம் கிடைத்த வாக்குகளும் தான்.

 

இப்படியே தேர்தல் நிதியை கணிசமாக திரட்டி சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வியூகத்துடன் களம் இறங்கி வெற்றிக் கொடி நாட்டுவது தான் நாம் தமிழர் கட்சியின் எண்ணம் எண்கிறார்கள். கணிசமான வாக்கு வங்கி, எதிர்பார்த்த அளவிற்கு நிதி உதவி என நாம் தமிழர் முகாம் தற்போது களைகட்டியுள்ளது.