திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்தால் அரசு வேலை முதல் தனியார் வேலை வரை அனைத்து விதமான வேலைகளுக்கும் செல்லும் அங்கீகாரம் உண்டு என துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் இயங்கிவரும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் B.Ed இரண்டு ஆண்டு படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால் அது தொடர்பாக துணைவேந்தர் பார்த்தசாரதி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர்:  இனி விருப்பமுள்ள மாணவர்கள் திறந்தவெளி பல்கலைக் கழகத்திலும் 2 ஆண்டு பிஎட் படிப்பு  சேர்ந்து படிக்கலாம் என தெரிவித்தார். மேலும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்தால் அரசு வேலை முதல் தனியார் வேலை வரை அனைத்து விதமான வேலைகளுக்கும் அங்கீகாரம் உண்டு எனவும் எனவே மாணவர்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் திறந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து பயன்பெறலாம் என துணைவேந்தர் பார்த்தசாரதி கூறினார். 

அரியர் தேர்வுகளை பொருத்தவரையில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தாலே பாஸ் என அறிவிக்கப்பட்டது, அதில் எந்த மாற்றமும் இல்லை. மதிப்பெண்களை உயர்த்திக் கொள்வதற்காக விரும்புபவர்கள் மட்டும் மறுதேர்வு எழுதிக் கொள்ளலாம் என அறிவித்து உள்ளோம். திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மண்டல வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.