அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புக்கு அனைத்து கிரகங்களும் சாதகமாக இருப்பதால், எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த  பிரபல ஜோதிடர் கணித்துள்ளார். பிகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் ஜோதிட ஆலோசகராக இருந்த சங்கர் இவ்வாறு கணித்துள்ளது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் இருவரும் ஒவ்வொரு மாகாணமாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கொரோனாநெருக்கடிக்கு மத்தியிலும் இரு கட்சிகளும் தனித்தனியே பிரச்சார குழு அமைத்து இணையதளம் வாயிலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸை மையமாக வைத்து ட்ரம்ப்புக்கு எதிரான பிரச்சாரத்தை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன்  தீவிரப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் ஜோ பிடன் சீனாவுக்கு நெருக்கமானவர் எனவும், அவர் அமெரிக்காவின் அதிபராகும் பட்சத்தில் அமெரிக்கா சீனாவின் கட்டுக்குள் வரும் எனவும் கூறி அதிபர் டிரம்ப் பிடனுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். மொத்தத்தில் இரு தரப்பினரும் காரசாரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக இந்தியர்களின் வாக்குகளை பெறுவதற்கு ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் தேர்தல் ஆய்வு மையமான சென்டர் பார்  ரெஸ்பான்ஸ் பாலிடிக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல்தான் மிக அதிகமாக பணம் செலவழிக்கப்பட்ட தேர்தலாக வரலாற்றில் அமைய உள்ளதாக தெரிவித்துள்ளது. 

இத் தேர்தலில் 80 லட்சம் கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரிரு நாட்களில் அது ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தளவிற்கு மிகுந்த பொருட்செலவில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் யார் அமெரிக்காவின் ஜனாதிபதியாக போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு உலக அளவில் பன் மடங்கு மேலோங்கியுள்ளது. இதுகுறித்த பல்வேறு கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் சரண் திரிபாதி என்ற பிரபல ஜோதிடர் அதாவது பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ஜோதிட ஆலோசகராக இருந்தவர், இவர் கணித்தால் அது சரியாக இருக்கும் என்பது அம்மாநில மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது இந்நிலையில் ஜோதிடர் சங்கர் சரண் திரிபாதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஜாதகத்தை ஆய்வு செய்து கணித்துள்ளார். 

அதில் அனைத்து கிரகங்களும் ட்ரம்புக்கு சாதகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதிபர் தேர்தலில் ட்ரம்ப் அதிகபட்சமாக ஒன்பது லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெறுவார் என்று கணித்துள்ளார். ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்றாலும் அவர் வாக்குகளில் மோசடி செய்தே வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும் என ஜோதிடர் திரிபாதி கணித்துள்ளார்.