அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதை இதுவரை அங்கீகரிக்கவில்லை என ஒபிஎஸ் அணியின் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஜெயலலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் அவரிடம் இருந்து பிரிந்து வந்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கினார். 

மேலும் கட்சியும் சின்னமும் எங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்து வந்தார். 

அதைதொடர்ந்து கட்சி விதிமுறைகளின் படியே பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தன. 

இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவும், இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் சிறைக்கு சென்றதால் ஒபிஎஸ் அணியின் கருத்தை ஏற்று வாய் மொழியில் இருவரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக  எடப்பாடி தரப்பு அறிவித்தனர். 

ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவி பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தவே எடப்பாடி தரப்பு இன்று அதிரடியாக டிடிவியை நீக்கம் செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

இந்நிலையில், ஒபிஎஸ் அணியினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி சசிகலா குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் சசிகலாவை பொதுச்செயலாளராக இன்னும் அங்கீகரிக்க வில்லை எனவும் பொதுச்செயலாளர் நியமனத்தில் சர்ச்சை இருப்பதால் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.