நிலக்கரி சுரங்க அறிவிப்பில் இருந்து பின்வாங்கிய மத்திய அரசு..! நாங்கள் தான் காரணம் என மார் தட்டும் இபிஎஸ்
தமிழ் நாட்டில் புதிதாக சுரங்கம் தோண்டும் பணியை கைவிடுவதாக மத்திய சுரங்கத் துறை அமைச்சர் அறிவித்தது, தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என கூறியுள்ளார்.
நிலக்கரி சுரங்கம்
தஞ்சை மாவட்டம் அருகில் 3 நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு டெண்டர் வெளியிட்டிருந்தது. மேலும் 500 இடங்களில் ஆழ்துளை போட்டு சோதனை மேற்கொள்ளவும் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தது. மேலும் தமிழக சட்டமன்றத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக சார்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பிரச்சனை எழுப்பப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணி வாபஸ் பெறப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனை அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளனர்.
சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு
இந்தநிலையில், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், காவேரி டெல்டா விவசாயிகளின் நலனுக்காக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டவரப்பட்டது. இந்நிலையில், அண்மையில் அங்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. தூங்கிக் கொண்டிருந்த, காலங்கடந்து எதிர்ப்பு தெரிவித்த விடியா திமுக அரசின் கவனத்தை, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்ததுடன், நாடாளுமன்றத்திலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கவன ஈர்ப்பு கொண்டுவந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,
அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி
இன்று மத்திய சுரங்கத் துறை அமைச்சர், தமிழ் நாட்டில் புதிதாக சுரங்கம் தோண்டும் பணியை கைவிடுவதாக அறிவித்தது, தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
சென்னை வந்த மோடி..! வரவேற்க வராத அண்ணாமலை.? காரணம் என்ன.? எங்கே சென்றார் மாநில தலைவர்.?