Asianet News TamilAsianet News Tamil

இந்த வேகம் போதாது முதல்வரே.. பணிகளை இன்னும் விரைவுப்படுத்துங்க.. ராமதாஸ் சரவெடி..!

சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளமும், அதற்கு முன்பும், பின்பும் ஏற்பட்ட சிறு வெள்ளங்களும் நமக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமானது சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் கூட, அடுத்த சில மணி நேரங்களில் மழை நீர் வடியும் அளவுக்கு மழை நீர் வடிகால்கள் தூர்வாரப்பட வேண்டும்.

Accelerate drainage in Chennai... Ramadoss
Author
Chennai, First Published Nov 8, 2021, 5:16 PM IST

சென்னையில் மழை நீரை வடியச் செய்யும் பணிகளையும், வடிகால்வாய்களைச் செம்மைப்படுத்தும் பணிகளையும் மாநகராட்சியும், அரசின் பிற துறைகளும் விரைந்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னையில் இரண்டாவது நாளாக தொடரும் மழையின் தீவிரம் ஓரளவு குறைந்திருந்தாலும் கூட, மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியத் தொடங்கவில்லை. அதனால், இயல்பு வாழ்க்கை பாதிப்பைக் கடந்து, அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

Accelerate drainage in Chennai... Ramadoss

சென்னையில் நேற்று முன்நாள் பெய்த மழை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான மழை என்பதிலும், அதனால் சென்னையின் பல பகுதிகளில் பல அடி ஆழத்திற்கு மழை நீர் தேங்கிக் கிடக்கிறது என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், ஒப்பீட்டளவில் மழையின் தீவிரம் கணிசமாகக் குறைந்தும் கூட மழை நீர் இன்னும் வடியவில்லை என்பதும், அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை என்பதும் மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று காலை வரை அதிகபட்சமாக 23 செ.மீ மழை பெய்திருந்தது. ஆனால், இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் பெரம்பூர் பகுதியில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பெய்திருக்கிறது. சென்னையின் மற்ற பகுதிகளில் மழை அளவு 10 செ.மீ.க்கும் குறைவாகவே உள்ளது. ஆனாலும், பெரும்பான்மையான இடங்களில் மழை வெள்ள நீர் வடியவில்லை. குறிப்பாக சென்னையின் உட்புறச் சாலைகளில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. பொது மக்களால் வீடுகளை விட்டு வெளியில் வர முடியவில்லை.

Accelerate drainage in Chennai... Ramadoss

சென்னையின் ஒருசில இடங்களில் மட்டும்தான் மழை நீரை வடியச் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான பகுதிகளில் அந்தப் பணிகள் இன்னும் தொடங்கப்பட வில்லை. சில இடங்களில் மழை நீர் வடிகால்கள் மழை நீரை உள்வாங்க முடியவில்லை என்றும், அவை சரியாக பராமரிக்கப்படாததுதான் அதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் பெருமக்களும் சென்னையில் நேற்றும், இன்றும் மழை நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர். அதன் பயனாக மழை & வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. அதே நேரத்தில் மழை நீரை வடியச் செய்யும் பணிகள் இன்னும் பல மடங்கு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

Accelerate drainage in Chennai... Ramadoss

சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளமும், அதற்கு முன்பும், பின்பும் ஏற்பட்ட சிறு வெள்ளங்களும் நமக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமானது சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் கூட, அடுத்த சில மணி நேரங்களில் மழை நீர் வடியும் அளவுக்கு மழை நீர் வடிகால்கள் தூர்வாரப்பட வேண்டும்; சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்பவை ஆகும். இனி வரும் காலங்களிலாவது மழை நீர் வடிகால்களைச் செம்மைப்படுத்தி மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Accelerate drainage in Chennai... Ramadoss

சென்னையில் மட்டுமின்றி, சென்னை புறநகர் மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை மாநகர குடிநீர் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்றாலும், ஏரிக்கு வெளியே தாம்பரம், மணிமங்கலம் பகுதியிலிருந்தும் அடையாற்றில் பெருமளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த நிலைமை இன்னும் மோசமடையும் ஆபத்து உள்ளது.

Accelerate drainage in Chennai... Ramadoss

வங்கக் கடலில் நாளை உருவாக உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த இரு நாட்களில் வலுப் பெற்று வட தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் பெய்யும் மழையையும் சென்னை மாநகரம் தாங்க வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சென்னையில் மழை நீரை வடியச் செய்யும் பணிகளையும், வடிகால்வாய்களை செம்மைப்படுத்தும் பணிகளையும் மாநகராட்சியும், அரசின் பிற துறைகளும் விரைந்து செய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios