2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூடிய ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையின் 35 ஆம் கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை,  'கென்டக்கி கர்னல்' விருதை பணம் கொடுத்து திமுகவினர் வாங்கினர். அதை வைத்து தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர், பாராட்டு விழாக்களை நடத்தினர் என ஐநா சபையில் அங்கம் வகிக்கும் பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் ரத்தினம் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் விளக்கமாக கூறியுள்ளார்.

அதில்; "திமுகவின் வெட்கம் கெட்ட விளம்பரங்கள்: ஐநா சபை கண்டனம்! மு.க. ஸ்டாலினை போற்றிப் புகழும் விதமாக வெட்கம் கெட்ட பொய்ச்செய்தி பரப்பப்படுவதாகக் கூறி ஐநா அவை முன்னாள் துணைப் பொதுச்செயலாலர் கண்டித்துள்ளார். இப்படி ஒரு அவலம் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு நேர்ந்த அவமானம் ஆகும்.

பொய்யான கட்டுக்கதைகளை கட்டமைத்து, தமிழர்களை நம்பவைத்து ஏமாற்றுவது திமுகவுக்கு கைவந்த கலை. இப்படித்தான் காலம் காலமாக பொய்யான பிம்பங்களை பொய்ச்செய்திகள் மூலம் உருவாக்கி ஏமாற்றினார்கள். 'திமுக தலைவர் கலைஞருக்கு ஆஸ்திரியா நாடு அஞ்சல் தலை வெளியிட்டது' என்றும், மு.க. ஸ்டாலினுக்கு அமெரிக்காவின் தலைசிறந்த 'கென்டக்கி கர்னல்' விருது வழங்கப்பட்டது என்றும் கட்டுக்கதைகள் வெளியிடப்பட்ட போதெல்லாம் அதனை தொடர்புடைய அமைப்புகள் மறுக்கவில்லை. ஆனால், இப்போது சமூக ஊடகங்களின் உதவியுடன் திமுகவினரின் முகத்திரை ஐநா அவையால் கிழிக்கப்பட்டுள்ளது.

"ஐநா முன்னாள் துணைப் பொதுச்செயலாலர் கண்டனம்: நடந்தது என்ன?"

ஐநா முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் என்பவர் அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் மு.க .ஸ்டாலினை புகழந்துள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வந்தனர்.

"நான் வியந்த உலகத் தலைவர்கள்" என்ற புத்தகத்தின் 372-வது பக்கத்தில் ஸ்டாலின் குறித்து ஐநா முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் குறிப்பிட்டு இருந்ததாகவும், அதில் "நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர், தொடர்ந்து ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசினார் என்றும், அவரின் நீண்ட கால அரசியல் திட்டங்கள் குறித்த அவரின் பேச்சுக்களை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பு எடுத்து அதனை இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்" என்றும், "இப்படிப்பட்ட ஒரு தலைவர் மற்ற நாடுகளில் இருந்தால் அவரை உலகமே தூக்கிக் கொண்டு இருக்கும்" என்றும் ஜான் எலியாசன் தனது புத்தகத்தின் 372வது பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாக ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.

இது குறித்து வேறு சிலர் டுவிட்டரில் ஜான் எலியாசன் அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு இவ்வாறு நீங்கள் உங்களுடைய புத்தகத்தில் கூறியது உண்மைதானா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலாக: 'ஸ்டாலின் யார் என்றே எனக்கு தெரியாது. இது வெட்கம் கெட்ட பொய்ச்செய்தி ' என்று ஜான் எலியாசன் டுவிட் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மு.க. ஸ்டாலின் தன்னுடன் நிற்கும் படம் குறித்து தனக்கு நினைவு இல்லை என்றும், அது தனது அலுவலகம் போல இல்லை என்றும் கூட குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, மு.க. ஸ்டாலினை மாபெரும் ஆளுமையாக 'போலியாக கட்டமைக்கும்' திமுகவின் முயற்சிக்கு - ஐநாவின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் நேரடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் விநோதமானது (strange), வெட்கம் கெட்டது (brazen), பொய்ப்பித்தலாட்டம் என்பதாகவெல்லாம் அவர் திமுகவினரை விமர்சித்துள்ளார்.

கடந்த கால 'வெட்கம் கெட்ட விளம்பரங்கள்'

பொய்யான கட்டுக்கதைகள் மூலம் அப்பட்டமாக புளுகுவது, திமுகவினருக்கு இது முதல் முறை அல்ல. ஆஸ்திரியா ஸ்டாம்பு என்றும் கென்டக்கி கர்னல் என்றும் மாபெரும் பொய்களை வெட்கமே இல்லாமல் அள்ளி விட்டவர்கள் தான் திமுகவினர்!

"கருணாநிதி: ஆஸ்திரியா ஸ்டாம்பு"

"தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிட்டது. "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் கருணாநிதி வெளியிட்டார்.

ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இது ஒரு மிகச் சாதாரணமான காரியம் ஆகும்.

ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையிடம் பணம் செலுத்தி நாம் எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் அஞ்சல் தலையாக வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை, பூனை, நாய் அல்லது ஒரு கார்ட்டூன் போன்ற எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும். இதற்கு சுமார் 222 யூரோ பணம் கட்டினால் போதும்.

அப்படி ஒரு ஸ்டாம்பினை கலைஞர் கருணாநிதி பெயரில் பணம் கட்டி திமுகவினர் வாங்கினர். இதை வைத்து தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர், பாராட்டு விழாக்களை நடத்தினர். கலைஞரே 'தன்னைத்தானே புகழ்ந்து' முரசொலியில் கட்டுரை தீட்டினார்.

"மு.க. ஸ்டாலின்: கென்டக்கி கர்னல்"

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பொதுச்சேவைக்காக பணம் திரட்டுவதற்காக கென்டக்கி கர்னல் எனும் விருதை வைத்துள்ளார்கள். இந்த அமைப்புக்கு நிதி உதவி அளிப்பவர்களுக்கு கென்டக்கி கர்னல் எனும் விருதினை வழங்குவார்கள். அதாவது, யார் பணம் கொடுத்தாலும் அவர் பெயரில் 'கென்டக்கி கர்னல்' எனும் விருதினை அனுப்புவார்கள். இது முழுக்க முழுக்க நிதி திரட்டுவதற்கான ஒரு நுட்பம் மட்டுமே. இந்த விருதை பணம் கொடுத்து திமுகவினர் வாங்கினர்.

அதை வைத்து தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர், பாராட்டு விழாக்களை நடத்தினர். நடிகர் சங்கங்கள் சிறப்பு தீர்மானங்களை எல்லாம் நிறைவேற்றினர். இப்போதும் கூட கென்டக்கி கர்னலே என்று ஸ்டாலினை அழைக்கின்றனர் உடன் பிறப்புகள்!

"நடக்காத ஐநா கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை: மு.க. ஸ்டாலின் அண்டப்புளுகு!"

2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூடிய ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையின் 35 ஆம் கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. ஆனால், இல்லாத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் - ஒரு மோசடி நாடகத்தை திமுகவினர் நடத்தினர்.

இது தொடர்பாக திமுக வெளியிட்ட ஒரு அறிக்கையில் "ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த முக்கியமான 35வது அமர்வில், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்" என்று மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஆனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை.

இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்திற்கு தான் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் 'சட்டமன்ற அலுவல்கள் காரணமாக, தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதினார்.

"முகத்திரை கிழிக்கப்பட்டது"

இப்படியாக, பொய்யான கட்டுக்கதைகளை கட்டமைத்து, தமிழர்களை நம்பவைத்து ஏமாற்றுவது திமுகவுக்கு கைவந்த கலை. இப்படித்தான் காலம் காலமாக பொய்யான பிம்பங்களை பொய்ச்செய்திகள் மூலம் உருவாக்கி ஏமாற்றினார்கள். அண்மை தேர்தலில் கூட 'கடன் தள்ளுபடி' என்று பொய்யுரைத்து வாக்குகளை வாங்கினார்கள்!

இப்போது முதல் முறையாக, ஐநாவின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் மூலமாக இவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.