புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவசரஅவசரமாக புறப்பட்டுச் சென்றார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக கூட்டணிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள பாமக, பாஜக ஆகிய கட்சிகள் அதிமுகவிற்கு நெருக்கடியை அதிகரித்து வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பரேவை இடைத் தேர்தல்களில் இந்த இரண்டு கட்சிகளும் அதிமுகவிற்கு முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்தன. ஆனால் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரண்டு கட்சிகளுமே அதிமுகவை ஓரம்கட்டும் வகையில் செயல்பட்டு வருகின்றன. அதுவும் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவின் முடிவை ஏற்க இரண்டு கட்சிகளுமே மறுத்து வருகின்றன.

பாமக தற்போது வரை எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் வேட்பாளராக தேர்வான பிறகு வாழ்த்து தெரிவிக்கவில்லை. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த எல்.முருகன் கூட பாஜக கூட்டணிக்கான முதலமைச்சர் வேட்பாளரை மேலிடம் தான் முடிவெடுக்கும் என்று அறிவித்துவிட்டார். இதனால் இந்த விஷயத்தில் திரிசங்கு நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் தான் கூட்டணி என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்தும் கூட கூட்டணி கட்சிகள் இறங்கி வரவில்லை.

இதற்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை ஒட்டி அவரை நேரில் சென்று சந்தித்து ராமதாஸ் இரங்கல் தெரிவிக்கவில்லை. அன்புமணியும் கூட அந்த பக்கம் செல்லவில்லை. ஆனால் பாமக தலைவர் ஜிகே மணி மட்டுமே சென்று வந்தார். ஆனால் ராமதாஸ் தன்னை சந்திக்க வராததை பெரிய குறையாக எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இந்த நிலையில் கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக மேலிடம் என்ன முடிவு எடுக்கும் என்கிற அச்சமும் எடப்பாடியிடம் இருப்பதாக சொல்கிறார்கள்.

இதற்கிடையே திடீரென தமிழகத்தில் ஆட்சியாளர்கள் சரியில்லை என்று ராமதாஸ் போட்ட ட்வீட், தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் சுமூகமான நிலை இல்லை என்பது மட்டும் தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்பே இப்படி கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதை எடப்பாடியால் ஏற்க முடியவில்லை என்கிறார்கள். இதனால் தான் புதுக்கோட்டையில் சுற்றுப்பயணத்தின் போது எடப்பாடி பதற்றமாகவே காணப்பட்டதாக சொல்கிறார்கள். மிக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டும் கூட எடப்பாடி முகத்தில் மகிழ்ச்சியை காண முடியவில்லை.

கூட்டணியில் இருந்து கொண்டே ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனுடன் ஒப்பிட்டு ராமதாஸ் கோபத்தை வெளிப்படுத்தியது எடப்பாடிக்கு ஷாக்காக இருந்ததாக சொல்கிறார்கள். இவை அனைத்தும் ராமதாஸின் கோரிக்கை குறித்து எடப்பாடி பரிசீலிக்காதது தான் என்கிறார்கள். வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு எனும் பிரச்சனையை தற்போது ராமதாஸ் கையில் எடுத்துள்ளார். இதனை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்கிறார்கள். இது தொடர்பாக எடப்பாடியை பாமக நிர்வாகிகள் 2 முறை சந்தித்தும் சாதகமான பதில் வரவில்லை.

இதனை தொடர்ந்தே ஜனவரி முதல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராமதாஸ். 1980களில் நடைபெற்ற போராட்டம் போல் இது இருக்கும் என்று ராமதாஸ் மிரட்டியுள்ளதும் அதிமுக அரசிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வட மாவட்டங்களில் வன்னியர்களையும், மேற்கு மாவட்டத்தில் கவுண்டர்களையும் நம்பித்தான் எடப்பாடி சட்டப்பேரவை தேர்தலையே எதிர்கொள்ள இருந்தார். ஆனால் ராமதாஸ் போராட்டத்தை தொடங்கினால் வன்னியர்கள் எடப்பாடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க நேரிடும். இதனால் தான் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவிட்டு, செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்காமல் பதற்றத்துடன் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக பேச்சுகள் அடிபடுகின்றன.