மாற்று அரசியல் தருகிறேன் பேர்வழி! என்று களமிறங்கியிருக்கிறார் கமல்ஹாசன். கொடி புதிது! கோஷம் புதிது! கொள்கை புதிது! என்று அரசியலை அணுகும் முறையில் ஆச்சரியம் காட்டுகிறார். இதெல்லாமே ஆரோக்கியமான விஷயங்கள்தான்.

மதுரையில் கட்சி துவங்கிய கமல், அடுத்து இன்று திருச்சியில் பொதுக்கூட்டத்தை நடத்துகிறார். இதில் கலந்து கொள்வதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து திருச்சிக்கு கிளம்பினார் கமல்ஹாசன். செல்லும் வழியில் பல ஊர்களில் ஸ்டேஷன்களில் மக்களை சந்தித்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தார். ஆனால் அதற்கு அரசு தரப்பிலிருந்து சிக்கல்கள் எழுந்தன. ரயில்வே ஸ்டேஷன்களில் நடத்தப்படும் நிகழ்வுகளில் விபத்து ஏற்பட்டு, உயிர்பலியானதை சுட்டிக் காட்டி முட்டுக்கட்டை போடப்பட்டது.

இதனால் அந்த முடிவிலிருந்து பின் வாங்கிய கமல்ஹாசன் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சொகுசான, குளிரூட்டப்பட்ட சேர் கார் கோச்சில் தன் உதவியாளர்கள், பி.ஏ.க்கள், கட்சி நிர்வாகியான ஸ்ரீபிரியா, கமீலா நாசர் ஆகியோர் புடைசூழ திருச்சிக்கு பயணப்பட்டார். அவரது பாதுகாப்புக்கு ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ.க்கள், பத்து போலீஸாரும் சென்றனர்.

ரயில் பயணத்தின் போது மக்களை சந்தித்து குறைகேட்கும் முடிவிலிருந்த கமல், தான் அமர்ந்திருந்த இடத்துக்கு, தன்னை தேடி வந்த பொதுமக்களை மட்டுமே சந்தித்து பேசியும், ஆட்டோகிராப் போட்டும் கொடுத்தார்.  பிறகு ரயிலில் இருந்து இறங்கி, காரிலேறி பறந்து, ஹோட்டலில் அடைக்கலமாகிவிட்டார்.இந்நிலையில் கமலின் இந்த ரயில் அரசியலை வெச்சு செய்யும் அரசியல் விமர்சகர்கள் “பாத்ரூம் போறதுக்கு கூட ஃப்ளைட் பிடிக்கும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் ரயிலை கமல் தேர்ந்தெடுத்தது அழகு.

மக்களை சந்திக்கத்தான் இப்படி ரயிலில் செல்வதாக அவரும் சொன்னார்.ஆனால் அவர் ஏஸியில் இல்லாமல் சாதாரண பெட்டியில் அமர்ந்து சென்றிருந்தால்தான் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை சந்தித்திருக்க முடியும். அவர்களின் கோரிக்கைகளை, சந்தோஷங்களை, துக்கங்களை கண்டிருக்கவும், அறிந்திருக்கவும் முடியும். புதிய புதிய போராட்டத்துக்கான களங்களை கணித்திருக்கவும் முடியும் அவரால்.

அதைவிட்டு தன் பாதுகாப்பு தூண்கள் சுற்றி நிற்க, ஏஸியில் போனவருக்கு எப்படி ஏழைகளின் கண்ணீர் புரிந்திருக்கும்? இந்த பாதுகாப்பு சாதனங்களை எல்லாம் கழற்றி வீசிவிட்டு மக்களோடு மக்களாக முன்பதிவில்லாத கோச்சில் சென்றிருந்தால் கமலின் அரசியலை மாற்று அரசியல் என்று ஏற்றிருக்கலாம். இது வெறும் சீன் அரசியல்தான்!” என்கிறார்கள்.
என்ன சொல்றீங்க நம்மவரே?!