பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனுக்கு சமூக ஆர்வலர் ஒருவர், கூரியர் மூலம் எலி மருந்தை அனுப்பி வைத்துள்ளார். மக்கள் பிரச்சனை தீர்க்க வேண்டும் என்று தங்களுக்கு உதவும் நோக்கில் எலி மருந்தை அனுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று நேற்று முன்தினம் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் பேசியது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  எம்.பி. நவநீதகிருஷ்ணனின் இந்த மிரட்டலுக்கு திராவிட கட்சி தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உள்ளிட்ட பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். 

இந்த நிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி, பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனுக்கு எலி மருந்து அனுப்பும் போராட்டம் துவக்கியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என நவநீதகிருஷ்ணன் எம்.பி., நாடாளுமன்றத்தில் பேசிய நிலையில், காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்காததால், மகேந்திரனுக்கு எலி மருந்து போராட்டத்தை, பெரியார் மணி மேற்கொண்டுள்ளார். எம்.பி. மகேந்திரனுக்கு அனுப்பிய எலி மருந்துடன், தனது எதிர்ப்பு கருத்து அடங்கிய கடிதத்தையும் பெரியார் மணி அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், வணக்கம், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுள் ஒருவராக நான் வைக்கும் கோரிக்கை, தங்கள் கட்சி சார்பாக 37 எம்.பி.க்கள் இருந்தும் தமிழக விவசாயிகளின் பல வருட பிரச்சனைக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை. ராஜினாமா செய்யாமல் தற்கொலை செய்வோம் என்று தங்கள் கட்சி நவநீதகிருஷ்ணன் பேசியது வரவேற்கத்தக்கது. 37 பேரும் தற்கொலை செய்தாவது மக்கள் பிரச்சனையை தீர்க்கவும். தங்களுக்கு உதவும் நோக்கில் எலி மருந்து அனுப்புகிறேன் நன்றி என்று அந்த கடிதத்தல் பெரியார் மணி எழுதியுள்ளார்.