அரசின் சாதனை திட்டங்களை விளக்கி கூறினாலேயே மாற்று கட்சியினர் கூட அதிமுகவுக்கு ஓட்டு போடுவார்கள் என்று அமைச்சர் சி.வி சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக சட்டத்துறை  அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சி.வி சண்முகம் கலந்துகொண்டு மேடையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 

தற்போது இங்கு வந்துள்ள பெண்களை ஊக்கப்படுத்தினாலே அதிமுகவை 100 ஆண்டு காலம் யாராலும் அசைக்க முடியாது, அதிமுகவில் இனி பெண்களுக்கு மதிப்பு அளிக்கப்படும், தாய்மார்கள் மனது வைத்தால் அதிமுக வெற்றி நிச்சயம், பெண்கள் இளைஞர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும். 2011 முதல் 2010 வரையிலான 10 ஆண்டுகால  அதிமுக ஆட்சியில் 72 கலைக் கல்லூரிகள், 24 பாலிடெக்னிக் கல்லூரிகள், நான்கு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு பல்கலைக்கழகம் கொடுத்தஅரசு அதிமுக அரசு. விரைவில் ஜெ.ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்று உதயமாகும், பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அம்மா வழங்கினார். வரும் தேர்தலில் அவரின் லட்சியக் கனவை நிறைவேற்றியாக வேண்டும். அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துச் சொன்னாலே மாற்று கட்சியினர் கூட அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் இவர் அவர் பேசினார்.