கன்னியாகுமரிக்கு சுற்றுலாப்பயணிகள் வருகைத்தர வசதியாக  இ-பாஸை ரத்து செய்து,  ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என கன்னியாகுமரி வியாபாரிகள் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரியில் இருந்து எழுந்துள்ள கோரிக்கைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருணை காட்டவேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்ததை அடுத்து இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி விடாதவாறு அதனை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோவில்கள் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில்களின் நடைகள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடத்த கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


 இதுபோல் பொது போக்குவரத்தும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பார்க்கிங் பஜார் மற்றும் சன்னதி தெரு போன்ற பகுதிகளில் வழக்கம்போல் கடைகளும் தங்கும் விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சுற்றுலாப்பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையிலும், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ பாஸ் முறை அமலில் உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் யாரும் கன்னியாகுமரிக்கு வருவதில்லை.வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளதால் வருமானம் இன்றி வியாபாரிகள் தவித்து வருகின்றனர். கொடைக்கானல் ஊட்டி போன்ற சுற்றுலாதலங்கள் செல்ல இபாஸ் அனுமதி பெற வேண்டி இருப்பதால் சுற்றுலாபயணிகள் வருகை தடைபட்டுள்ளது.

கன்னியாகுமரியை பொருத்தவரை சுற்றுலா பயணிகள் வந்தால் மட்டுமே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் சிறக்கும்.இபாஸ் நடைமுறையால் இங்குள்ள ஆட்டோ கால்டாக்சி சுற்றுலா கெய்டு சங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் ரெம்பவே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.. இதனால் இந்த பகுதியில் கடை நடத்தி வருபவர்கள் வாழ்வாதாரம் ஏதுமின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக மாநிலத்திற்கு மாநிலம் செல்ல இ பாஸ் முறையை ரத்து செய்து ரயில் போக்குவரத்தை உடனடியாக துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.