சாதிக் பாட்சாவின் 8ம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்தி தாள் விளம்பரம் ஆ.ராசாவையும், திமுகவினரையும் கதிகலக்கி வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துப்பு துலக்க ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், திமுக புள்ளிகளின் நெருக்கடியினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மரணமடைந்து இன்றோடு எட்டு ஆண்டுகளாகிறது.

மக்களவை தேர்தல் இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் திமுக மற்றும் ஆர்.ராசாவை கலங்க வைக்கும் வகையில் செய்தித்தாள்களில் கண்ணீர் அஞ்சலி வெளியிட்டுள்ளனர். அதில் ’’கூடாநட்பு கேடாய் முடியும் என்பதற்கு நீ உவமையாய் ஆனாயே.. உன் அன்பு முகம் கூட அறிந்திடா உள் பிள்ளைகள்’’ என விளம்பரம் வெளியாகி திமுக தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

சாதிக் பாட்சாவின் ஒவ்வொரு நினைவு தினத்தின் போதும் செய்தித் தாள்களின் நினைவு அஞ்சலியை வெளியிடும் அவரது குடும்பத்தினர் செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயே’’ என்றெல்லாம் கண்ணீர் அஞ்சலி வெளியிட்டு வந்தாலும் தற்போது தேர்தல் நேரம் என்பதால் சாதிக் பாட்சா குடும்பத்தினர் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

2ஜி ஊழல் வழக்கில் ஸ்டாலின், அவரது தாயார் தயாளு அம்மாள், தங்கை கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இதில் கனிமொழி, ஆ.ராசா இருவரும் திஹார் சிறைவாசம் அனுபவித்தனர். பின்னர் 2ஜி வழக்கில் யாருமே குற்றவாளிகள் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.