அருந்ததியர் சமுதாயம் குறித்து ஆ.ராசா சர்ச்சை பேச்சு! ஜாதி ரீதியாக அவமானப்படுத்துவது தான் திராவிட மாடலா? பாஜக
அருந்ததியர் சமுதாய மக்களை மலம் அள்ளும் சிறுபான்மை சமூகம் என்றும், அவர்கள் ஓட்டுப் போட்டு யாரும் ஜெயிக்கப் போவதில்லை என்றாலும் அவர்களுக்கும் கருணாநிதி 3 சதவீத உள்ஒதுக்கீடு கொடுத்தார்.
அருந்ததியர் சமுதாய மக்களை மலம் அள்ளும் சிறுபான்மை சமூகம் என்றும், அவர்கள் ஓட்டுப் போட்டு யாரும் ஜெயிக்கப் போவதில்லை என பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவிற்கு நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் திமுக எம்.பி.ஆ.ராசா பேசுகையில்;- அருந்ததியர் சமுதாய மக்களை மலம் அள்ளும் சிறுபான்மை சமுதாயம் என்றார். மேலும், 'அவர்கள் ஓட்டுப்போட்டு யாரும் ஜெயிக்கப் போவதில்லை. ஆனாலும், அவர்களுக்கும் கருணாநிதி 3 சதவீத உள் ஒதுக்கீடு கொடுத்தார். இதைச் சொல்லி விட்டு அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை என்றும் பேசி மன்னிப்பு கேட்பது போல பேசினார். இவரது பேச்சு அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜாதியை ஒழித்ததாக மார்தட்டிக் கொண்டு ஜாதி ரீதியாக அவமானப்படுத்துவது தான் திராவிட மாடலா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அருந்ததியர் சமுதாய மக்களை மலம் அள்ளும் சிறுபான்மை சமூகம் என்றும், அவர்கள் ஓட்டுப் போட்டு யாரும் ஜெயிக்கப் போவதில்லை என்றாலும் அவர்களுக்கும் கருணாநிதி 3 சதவீத உள்ஒதுக்கீடு கொடுத்தார் என்று ஆ. ராசா அவர்கள் கூறியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அருந்ததியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி, அவர்களை புண்படுத்தியதற்கு ஆ. ராசா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதியை ஒழித்ததாக மார்தட்டிக் கொண்டு ஜாதி ரீதியாக அவமானப்படுத்துவது தான் திராவிட மாடலா?
தமிழகத்தின் முதலமைச்சர்களாக பணியாற்றிய ராஜாஜி, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் சிறுபான்மை சமுதாயங்களை சார்ந்தவர்கள் தான் என்பதை ஆ.ராசா உணர வேண்டும். சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வழக்கத்தை ஆ.ராசா நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலமைச்சர்அவர்கள் ஆ. ராசாவின் மீது கடும் நடவடிக்கை எடுப்பாரா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.