முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வளாகம் மினி வாசஸ்தலமாக மாறிவருகிறது. முதல்வர் நலமடைய வேண்டி தொண்டர்கள் குவிந்து கிடப்பதும், அப்போலோ வாசலையே சர்வமத பூஜை மடமாக மாற்றியிருப்பதும் வேறு எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு சிறப்பாக பார்க்கப்படுகிறது.


இந்தியாவில் இப்படி ஒரு தலைவருக்கு விசுவாசமிக்க தொண்டர்கள் இருப்பார்களா? என்றகேள்வியும் எழுகிறது. அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட சில நாட்கள் தொண்டர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தார்கள்.

முதன்முதலில் ராஜன் செல்லப்பா கோவிலில் பூஜையை ஆரம்பித்து வைத்தார். பின்னர் அனைத்து நிர்வாகிகள் ,அமைச்சர்கள், மாஜி அமைச்சர்கள் என தொடர்கிறது. முதன் முதலில் அப்போலோவில் மஹாலய அமாவாசையை முன்னிட்டு போரூர் சாமியார் அன்பரசு பூசணி, தேங்காய் சாமந்திப்பூ வைத்து பூஜை செய்தார்.

அதன் பின்னர் சேலம் அழகாபுரம் ஜெயந்தி சாமியார் சூலாயுதத்துடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் அலேலுயா சபை சார்பிலும், இஸ்லாமியர்கள் சார்பிலும் பூஜைகள் , பாத்தியாக்கள் , பிரார்த்தனைகள் செய்யும் கூடமாக அப்போலோ நுழைவு வாயில் மாறிப்போனது. பிரியாணி சோறு சாப்பிட்ட தொண்டர்களும் அங்கு நேர்த்திக்கடன் செய்தனர்.

தினம் தினம் விஐபிக்கள் வருவதும் போவதும் என்று இருந்த அப்போலோவில் செய்தியாளர்கள் பேட்டிகளுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் இன்று காசியிலிருந்து பூசாரி ஒருவர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து கேள்விப்பட்டு வந்துள்ளார். அவரை உள்ளே விட பாதுகாப்பு போலீசார் மறுத்துவிட்டனர்.

அவரும் முதல்வரை பார்க்காமல் போகமாட்டேன் எனக்கூறிய அவர் தன்னை பற்றிய விபரங்களை சொல்லி அனுப்பினார். தான் காசி விஸ்வநாதர் கோவில் பிரதான பூசாரி என்றும் தனது பெயர் ஓமாச்சாரி என்று கூறி பிரசாதத்துடன் வந்திருப்பதாக கூறி தகவல் சொல்லி அனுப்பினார்.
சற்று நேரத்தில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி கருப்புச்சாமி நேரில் வந்து பவ்யமாய் அழைத்து சென்றார். பூசாரி ஓமாச்சாரி ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேசுகிறார்.
