செல்லும் இடமெல்லாம் பொது மக்களின் ஆதரவு, சுறுசுறுப்பு, தெளிவான பேச்சு, பாஜக எதிர்ப்பு என இபிஎஸ், ஓபிஎஸ் டீமைவிட டி.டி.வி.தினகரன் மிக நன்றாக ஸ்கோர் செய்து வருகிறார்.

தற்போது திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரும்  17 ஆம் தேதி வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இரண்டும் தினகரனை உற்சாகமடையச் செய்துள்ளது. தற்போது பம்பரமாக தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று தொண்டர்களை சந்தித்து வரும் தினா அவர்களது ஆதரவை திரட்டி வருகிறார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அமமுகவுக்கு எந்தப் பிரச்சனயும் இல்லை என்கின்றனர் தொண்டர்கள். தினகரனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஃபுளோர் டெஸ்ட், ஆட்சிக் கவிழ்ப்பு, பாதகமாக வந்தால் இடைத் தேர்தலை சந்திப்பது என்ற பிளான்தான் தினாவின் தற்போதைய நிலை. இதனால் எதையும் எதிர்கொள்ள அவர் தயாராகி வருகிறார்.

இந்நிலையில் தான் தினகரன் உற்சாகமாக சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும், இடைத் தேர்தல்களில் புதுத் தெம்புடன் பிரச்சாரத்தில் ஈடுபடவும்  சகல வசதிகள் கொண்ட புது வாகனம் ஒன்றை அமமுகவில் அமைப்புச் செயலாளர் சேலஞ்சர் துரை, வடிவமைத்து தினகரனுக்கு வழங்கியுள்ளார்.

இனி இந்த வாகனத்தில் தமிழகம் முழுவதும் டி.டி.வி.தினகரன் உற்சாக வலம் வர உள்ளார்.இந்த வேன் இனி தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழலும் என்றும், இதில் பிரச்சாரம் மேற்கொண்டு அடுத்தடுத்து வெற்றிகளை குவிப்பேன் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.