அரசியலுக்கு அட்சரசுத்தமாக பொருந்தக்கூடிய வேதவாக்கியம் ஒன்று உள்ளது. அது ‘எது உனை காக்கும் ஆயுதமாக உள்ளதோ, அதுவே ஒரு நாள் உன்னை வீழ்த்தவும் செய்யும்’ என்பதுதான் அது. பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவின் நிலை இப்படித்தான் சிக்கலாகியுள்ளது! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 
என்ன விஷயம்?....

ஜெயலலிதாவின் காலத்திலேயே கர்நாடக மாநில அ.தி.மு.க.வின் செயலாளராக இருந்து கொண்டு அரசியலில் கோலோச்சியவர் பெங்களூரு புகழேந்தி. ஜெயலலிதாவை விடவும் சசிகலாவிடம் மிக அதிக விசுவாசத்துடன் இருந்தார். ஜெ.,மரணத்துக்குப் பின் இது வெட்ட வெளிச்சமானது. அ.தி.மு.க.வில் சசி மற்றும் தினகரனுக்கு பிரச்னையான போதும் கூட அணி மாறாமல், ‘சின்னம்மாவின் விசுவாசி’ எனும் அடைமொழியுடன் தினகரனுடன் ஒட்டிக் கொண்டார். பல இடங்களில் செல்வாக்கு வைத்திருக்கும் புகழேந்தி தனக்கு ஆதரவாக இருப்பது சசிக்கு மன அளவிலும், பல வகைகளிலும் தெம்பாக இருந்தது. 

ஆனால் புகழேந்திக்கு இப்போது தினகரனோடு  பெரும் பிரச்னையாகி, அவருக்கு பரம எதிரியாக மாறியிருக்கிறார். ஆனாலும் இன்னமும் ‘சின்னம்மாவின் விசுவாசி’ என்றுதான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் கோயமுத்தூரில் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு, சசிகலாவுக்கு மிகப்பெரிய பிரச்னையை கொண்டு வந்துள்ளது!  என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அப்படி என்ன பேசிவிட்டார்? என்ன பிரச்னை வரும்?... இதைப்பற்றி விரிவாக பேசும் விமர்சகர்கள் “கோயமுத்தூரில் நடந்த  அ.ம.மு.க.வின் கூட்டத்தில் பேசிய புகழேந்தி ‘தினகரன் போல் வஞ்சக நெஞ்சம் கொண்ட மனிதரை நான் பார்த்ததில்லை. அவர் ஒரு பசுத்தோல் போர்த்திய நரி. சசிகலாவிடமிருந்து கோடி, கோடியாக பணம் வாங்கிக் கொண்டு தன் சுய விளம்பரத்துக்காக செலவு செய்து வருகிறார். எத்தனை கோடி பணத்தை சசிகலாவிடமிருந்து வாங்கினார், அதை யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தார்! என்பதெல்லாம் எனக்கு தெரியும். அந்த ஆதாரங்களை அவசியம் வரும்போது வெளியிடுவேன்.’ என்று சொன்னார். 

இதுதான் இப்போது சசிக்கு சிக்கலாகிறது. தினகரனுக்கு கொடுக்க கோடி கோடியாய் பணம் சசிக்கு எங்கிருந்து கிடைத்தது? அந்தப் பணத்தை எப்படி சம்பாதித்தார்? முறைகேடாக சொத்துக் குவித்ததாக வழக்கில் சிக்கி தண்டனையில் இருக்கும் நபரிடம் இவ்வளவு சொத்து ஏது? சிறையில் இருந்து கொண்டு யார் மூலம் இவ்வளவு கோடிகளை தினகரனுக்கு கைமாற்றினார் சசி? தினகரனுக்கு சசிகொடுத்த கோடிகள் எல்லாம் வழக்கு விசாரணைக்கு முன் உள்ளதா அல்லது பின் உள்ளதா? என்பதை அடிப்படையாக வைத்துத்தான் லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு புதிய வழக்கை சசிகலா மீது பாய்ச்சிட திட்டமிட்டுள்ளது. நன்னடத்தை மூலம் தண்டனை காலம் முடியும் முன்பே சிறை மீள சசி தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த புதிய வழக்கு அவரை பெருமளவு முடக்கி வீழ வைக்கும். 

ஆனால் இதற்கு அவரது விசுவாசியான புகழேந்தியே காரணமானதுதான் அவலம். மேடையில் புகழேந்தி பேசியதை, சசியின் ஊழலுக்கான ஒப்புதல் வாக்குமூலமாகவே பார்க்கிறது விஜிலென்ஸ்.” என்கிறார்கள். 
மை காட்!